(ஆர்.ராம்)
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணி ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி, உட்பட முக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களை விரைவில் சந்திப்பதென தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம், யாழில் உள்ள விக்கினேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது, சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் முதலில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் 11 பேரை உறுப்பினர்களாகக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட செயலணி, மற்றும் 13 உறுப்பினர்களை உள்ளடக்கி பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி ஆகியவற்றின் உள்நோக்கங்கள் பற்றி விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், அண்மைக் காலமாக முக்கிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதோடு, நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகருகின்றதா என்ற சந்தேகமும் எழுப்பபட்டது.
இது தொடர்பில் விசேட கரிசனை கொள்வதோடு அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டது.
மேலும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தயார்படுத்தல் தொடர்பிலும் பேசப்பட்டதோடு அதற்கு முன்னதாக, தமிழ் மக்களின் பிரச்சினைகள், தற்போதைய நிலைமைகள், பொறுப்புக் கூறல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் காணப்படுகின்ற மிகமோசமான பின்னடைவு நிலைமைகள் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி உட்பட முக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களை சந்திப்பதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதென தீர்மனிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment