(செ.தேன்மொழி)
சுயாதீனமாக இயங்கி வரும் அரச துறையை இராணுவத்தின் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இது அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்கம் படிப்படியாக இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருவதாகவும் இது எதிர்காலத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசியலமைப்பின் படி அரச சேவையானது சுயாதீனமாக இயங்க வேண்டிய துறையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர், இராணுவ தளபதி உள்ளிட்ட 13 இராணுவத்தினரை கொண்ட ஜனாதிபதி செயலனியின் ஆணைக்கமைய அரச துறை இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான திட்டங்களில் ஒன்றாகவே இதனை கருதமுடிகின்றது. அரச துறையினர் என்றுமே இராணுவத்தினரையும் விட உயர்மட்டத்தில் வைத்து பார்க்கப்பட்டு வருபவர்கள் இவர்களை இன்று இராணுவத்தினரின் ஆணைக்கு அமைவாக செயற்படுமாறு இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு செயற்படாவிட்டால் அவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தும்.
ஒரு நாடு பொதுச் சட்டம் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்வதர்கள் அதனை முறையாக பின்பற்றுகின்றார்களா? தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டம் எல்லோருக்கும் சமமான முறையில் செயற்படுத்தப்படுகின்றதா? நாட்டு மக்களுக்கு ஒரு வகையிலும் ஆட்சியாளர்களுக்கு ஒரு வகையிலும் இந்த சட்டம் செயற்படுவதை அண்மையில் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இவ்வாறு இந்த சட்டங்கள் மீறப்பட்ட போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் உறுப்பினர்கள் தலைமறைவாகினர். தொலைகாட்சி முன்னில் வந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு உத்தரவுகளை விடுத்து வந்த அவர்கள் அந்த குறிப்பிட்ட தினங்களில் எங்கிருந்தார்கள் என்றுகூட தெரிந்துக் கொள்ள முடியாமல் இருந்தது.
No comments:
Post a Comment