(நா.தனுஜா)
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையொன்று ஏற்படுவதை தடுப்பதற்கும், ஊரடங்கை தளர்த்துவதற்கும் உதவும் வகையில் சீனாவினால் மீண்டும் ஒரு தொகை மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உதவும் விதமாக சீனா தொடர்ச்சியாக மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கி வருகின்றது.
அந்த வகையில் சீன ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் ஊடாக புதன்கிழமை ஒரு தொகை மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதோடு, நேற்றையதினமும் மற்றொரு தொகுதி பொருட்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்படும் இப்பொருட்களில் 15000 மருத்துவப் பாதுகாப்பு அங்கிகள், 30000 கே.என் 95 முகக் கவசங்கள், 30000 கையுறைகள் மற்றும் 600000 சத்திர சிகிச்சை முகக் கவசங்கள் என்பன உள்ளடங்குகின்றன.
'இலங்கையில் ஊரடங்கை தளர்த்துவதற்கு உதவும் வகையிலும், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை தடுக்கும் வகையிலும் இந்த உதவியை வழங்குகின்றோம்' என்று சீனத் தூதரகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
அதேவேளை சீனாவில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான ரென்சென்ற் சரிற்றி பவுண்டேஷன் (Tencent Charity Foundation in Shenzhen) இலங்கைக்கு 10000 முகப்பாதுகாப்பு கவசங்களையும், 10 செயற்கையாக வாயுவை உட்புகுத்தாத வென்டிலேட்டர்களையும் நன்கொடையாக வழங்கியிருப்பதாக சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் கூறியிருக்கிறது.
No comments:
Post a Comment