பாராளுமன்றம் இயங்காமல் இருப்பது, மக்களுடைய இறைமையை மீறுவதாகும் - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

பாராளுமன்றம் இயங்காமல் இருப்பது, மக்களுடைய இறைமையை மீறுவதாகும் - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

“பாராளுமன்றம் கலைக்கப்படுவது புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு மட்டுமே. பாராளுமன்றத்தை கலைக்க வேறு காரணங்கள் கிடையாது. அப்படியிருக்க மார்ச் 2ம் திகதியின் வர்த்தமானியில் கலைப்பு மட்டும் நடைமுறை பட்டதாக இருக்க முடியாது. ‘கலைப்பு’ என்பது 1. தேர்தலில் புதியவர்களை தேர்ந்தெடுத்தல், 2. புதிய பாராளுமன்றம் கூடுதல் ஆகியவற்றிலிருந்து பிரிக்கப்படமுடியாது. பாராளுமன்றம் காலவரையறையின்றி இயங்காமல் இருப்பது, மக்களுடைய இறைமையை மீறுவதாகும்” என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் நேற்று முன்வைத்த சமர்ப்பணத்தில் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பான மனு மீதான தமது சமர்ப்பணத்திலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். 

அவரது சமர்ப்பணத்தின் முழு விபரம் வருமாறு ‘பாராளுமன்றம்’ என்கின்ற வார்த்தை 13ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் உபயோகிக்கப்பட தொடங்கியது. 1215ல் மேக்னா கார்ட்டாவின் பின் (Magna Carta) “பெரிய சபை” என்று அழைக்கப்பட்ட பிரபுக்களின் சபையே பாராளுமன்றம் என்ற பெயரை பெற்றது. மற்றைய நாடுகளோடு போரிடுவதற்கு பணம் தேவைப்படும் போது பாராளுமன்றத்தின் அனுமதியோடு பொது மக்களிடமிருந்து வரி அறவிடப்பட்டது.

அரசன் பாராளுமன்றத்தின் தலைவராக இருந்ததால், அரசன் இறக்கும் போது பாராளுமன்றமும் கலைக்கப்பட்டதாகவே கணிக்கப்பட்டது. முடிக்கு உரித்துடையவன் யார் என்கின்ற சர்ச்சை எழுந்து அடுத்த அரசன் நியமிக்கப்படுவதற்கு கால தாமதம் ஏற்றப்பட்ட காரணத்தினால், 17ம் நூற்றாண்டில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி அரசன் இறந்தால் உடனடியாக பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும். 

அந்த தருணத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இருந்தால், கலைக்கப்பட்ட பாராளுமன்றம் உடனடியாக கூடி, அடுத்த அரசன் மீள கலைக்கும் வரைக்கும் அல்லது ஆறு மாத காலத்திற்கு இயங்கு நிலையில் இருந்தது. பாராளுமன்றம் ஒன்று இறப்பதில்லை; அது கலைக்கப்பட்டாலும் மீள அழைக்கப்படலாம் என்கிற கோற்பாடு இதிலிருந்தே ஆரம்பமானது.

பிரித்தானிய பாராளுமன்றமே உலகிலுள்ள பாராளுமன்றம் அனைத்திற்கும் மூலகாரணி. பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயம், இலங்கையில் சட்டமாக அமைந்திருக்கின்றது. பாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் 7ம் பிரிவு, பிரித்தானியாவில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இலங்கையின் சட்டமென்றும், அந்த நடைமுறையை அறிவதற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் பேணப்படும் நாட்கோவையை பார்த்தறிய வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

பிரித்தானிய சம்பிரதாயத்தை அடியொட்டியதான எமது பாராளுமன்றமும், அதே அடிப்படை கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டது. பாராளுமன்றத்தை ‘கலைத்தல்’ அதனை இல்லாமலாக்குதல் என்று பொருள்படாது. பாராளுமன்றம் தொடர்ச்சியாக உயிரோடிருக்கும் ஒரு நிறுவனம். அதை கலைப்பதற்கான ஒரே காரணம் புதிய அங்கத்தவர்களை தேர்ந்தெடுப்பதற்காகவே ஆகும். அதனால் தான் புதிய அங்கத்தவர்கள் தேர்தெடுக்கப்படும் வரைக்கும் ‘கலைக்கப்பட்ட’ பின்னரும் கூட பழைய உறுப்பினர்கள் தேவையின் நிமித்தம் மீள அழைக்கப்படலாம். இந்த கோட்பாட்டையே எமது அரசியலமைப்பின் 70 (7), 155 ஆகிய உறுப்புரைகளில் காண்கிறோம்.

உறுப்புரை 70 (1)ல் பாராளுமன்றத்தின் காலமான 5 வருடங்களுக்கு முன்பதாகவே அதை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 4 1/2 வருடங்களுக்கு முன்னதாக இருந்தால், பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை ஒன்று அவசியமானது. இந்த நிபந்தனையை ஜனாதிபதி சிறிசேன மீறியதால் தான் 2018ல் பாராளுமன்றத்தை கலைத்த அவரது பிரகாண்டனம் வெற்றும் வெறித்துமானதென்று ஏழு நீதியரசர் கொண்ட உச்ச நீதிமன்றம், இராஜவரோதயம் சம்பந்தன் எதிர் சட்டமா அதிபர் என்ற வழக்கில் தீர்ப்பளித்தது.

முன்கூட்டியே கலைக்கின்ற எந்த பிரகடனத்திலும், தேர்தல் திகதியும், மூன்று மாத காலத்திற்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டிய நிபந்தனைகளும் உறுப்புரை 70(5)ல் உண்டு. புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் தினம் பின்னர் மாற்றப்பட்டாலும், அதுவும் மூன்று மாதகாலத்தினுள் கூட்டப்பட வேண்டும். பாராளுமன்றம் இயங்கா நிலையில் இருக்கக்கூடிய அதிகூடிய காலம் மூன்று மாதங்களே என்பது மாற்றமுடியாத அரசியலமைப்பின் கோட்பாடொன்று. அந்த மூன்று மாத கால இடைவெளியிலும் கூட முன் எதிர்பாராத நெருக்கடியொன்று ஏற்படுமாக இருந்தால், ஜனாதிபதி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று உறுப்புரை 70 (7)ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் தான், எட்டாவது பாராளுமன்றத்தின் 4 1/2 வருட காலம் 2020 மார்ச் 1ம் திகதி முடிவடைந்தவுடன், 2ம் திகதியே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கும் பிரகடனத்தை வெளியிட்டார். அதற்கு முன்னதாகவே உலகளாவிய ரீதியில் கோவிட்-19 பரவுவதை அனைவரும் அறிந்திருந்தோம். இது சம்பந்தமாக எதிர் கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் ஜனவரி 24ம் திகதியும் பெப்ரவரி 5ம் திகதியும் கேள்விகளை எழுப்பியிருந்தார். 

ஏப்ரல் அல்லது மே மாதங்களுக்குள் பொது தேர்தலொன்று நடத்தமுடியாமல் போகலாம் என்ற சந்தேகம் அப்பொழுதே இருந்தது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் திகதி ஆரம்பமாவதற்கு முதல் நாள், அதாவது மார்ச் 11ம் திகதி இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. கோவிட்-19தால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் கண்டுபிடிக்கப்பட்டார். இரண்டாவது, கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதை தொடர்ந்து பாடசாலைகள், வேலைத்தளங்கள் மூடப்பட்டன. 

மார்ச் 16ம் திகதி பொது விதிமுறையென்று அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 17, 18, 19ம் திகதிகளில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த மூன்று தினங்களும் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டிருந்ததென்று பின்னர் தெரிய வந்தது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த கையோடு, தேர்தல் காலவரையின்றி பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அடுத்த நாளிலிருந்து, அதாவது மார்ச் 20ம் திகதியிலிருந்து நாடளாவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ‘நடைமுறை ஊரடங்குச் சட்டம்’ இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கிறது.

2020 ஏப்ரல் 20ம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை 2020 ஜூன் 20ம் திகதி நடத்துவதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருக்கிறார்கள். இது மார்ச் 2ம் திகதியிலிருந்து மூன்று மாத கால நிபந்தனையை மீறுகிறது. பாராளுமன்றத்தை கலைத்த மார்ச் 2ம் திகதி பிரகடனத்தில் இப்பொழுதும் தேர்தலுக்கான திகதி ஏப்ரல் 25 என்றும் புதிய பாராளுமன்றத்தை கூடுவதற்கான திகதி மே 14 என்றும் தொடர்ந்தும் காணப்படுகின்றது. 

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொல்லப்பட்ட முதல் நாளிலேயே, அதாவது மே 18ம் திகதியன்று மேற் சொன்ன இரண்டு திகதிகளும் கடந்தாயிற்று. இப்படியான சூழ்நிலையில் மார்ச் 2ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட ஒரு விடையம் மட்டுமே அமுல்படுத்தக்கூடியது, தற்போது அது மட்டுமே அமுல்படுத்தப்பட்டும் இருக்கின்றது. மற்றைய திகதிகள் அமுல்படுத்த முடியாதவை.

பாராளுமன்றம் கலைக்கப்படுவது புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு மட்டுமே. பாராளுமன்றத்தை கலைக்க வேறு காரணங்கள் கிடையாது. அப்படியிருக்க மார்ச் 2ம் திகதியின் வர்த்தமானியில் கலைப்பு மட்டும் நடைமுறை பட்டதாக இருக்க முடியாது. ‘கலைப்பு’ என்பது 1. தேர்தலில் புதியவர்களை தேர்ந்தெடுத்தல், 2. புதிய பாராளுமன்றம் கூடுதல் ஆகியவற்றிலிருந்து பிரிக்கப்படமுடியாது. பாராளுமன்றம் காலவரையறையின்றி இயங்காமல் இருப்பது, மக்களுடைய இறைமையை மீறுவதாகும்.

பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியில் மூன்று திகதிகள் குறிப்பிடப்பட வேண்டுமென்று 70 (5) கூறுகின்றது. (1) கைக்கப்படும் தினம் (2) புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் திகதி (3) தேர்தல் நடத்தப்படும் திகதி. இந்த மூன்று விடயங்களும் உள்ளடக்கப்பட்டால் மாத்திரமே ‘கலைப்பு’ சட்டபூர்வமானதாக கருதப்படலாம்.

மார்ச் 2ம் திகதி இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்டிருந்த மூன்று திகதிகளும் நிறைவேற்றப்படக்கூடியதாக இருந்தன. ஆனால் தேர்தல் திகதியானது ஜூன் 20ற்கு மாற்றப்பட்ட போது மே 14ம் திகதி கூட்டப்பட்ட முடியாதது உறுதியானது. அது மட்டுமல்லாமல் புதிய பாராளுமன்றம் மூன்று மாத காலத்திற்குள் அதாவது ஜூன் 2ம் திகதிக்கு முன்னர் கூட்டப்பட்ட முடியாதென்பதும் உறுதியானது. அப்படியான சந்தர்ப்பத்தில் தான் மனுதாரர்கள் நீதி மன்றத்தை நாடினார்கள். 

தமது அடிப்படை உரிமைகள் மீறப்படப் போகின்றது என்று முறையிட்டார்கள். மீறுதல் நடைபெறுவதற்கு முன்னரே மனுதாரர் நீதிமன்றத்திற்கு வந்தால் அந்த மீறுதல் நடைபெறுவதற்கு முன்னதாகவே அதனை தடுப்பது நீதிமன்றத்தின் கடமையாகும். நாளைக்கு (ஜூன் 2, 2020) நள்ளிரவு இந்த மீறுதல் நடைபெறும். அதற்கு முன்னதாக நீதிமன்றம் உத்தரவொன்றை கொடுக்கவேண்டும்.

மேற்சொன்ன மூன்று மாத காலக்கெடு கட்டாயமாக கடைபிடிக்க வேண்டியதொன்றா அல்லது சூழ்நிலைக்கேற்ப அது நீடிக்கப்படலாமா என்ற கேள்வி எழுகின்றது. 2018ம் ஆண்டு பாராளுமன்ற கலைப்பு வழக்கில் 70வது உறுப்புரையிலுள்ள காலக்கெடுக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டியவை என்று சம்பந்தன் எதிர் சட்டமா அதிபர் என்ற வழக்கில் ஏழு நீதிபதிகளால் நிலைநாட்டப்பட்டுள்ளது.

அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு அரசியலமைப்பாக்கம், ஜனநாயக ஆட்சிமுறை, சட்டத்தின் ஆட்சி என்பனவற்றை பேணவேண்டும். இவை அரசுக்கு எதிரான வழக்குகள் ஆகும். அரசின் வெவ்வேறு முகவர்கள் ஒருவர் மற்றவர் மீது குறைகூற முடியாது. அப்படிச் செய்வதே எமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை உறுதிப்படுத்துகிறது. ஆகையால் முதல்நிலை விசாரணையில் மனுதாரருக்கு சார்பாக தீர்ப்பளித்து வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment