தேர்தல் திகதியை விட மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மிக முக்கியமானது - முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 9, 2020

தேர்தல் திகதியை விட மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மிக முக்கியமானது - முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ்

(செ.தேன்மொழி)

தேர்தல் திகதியை விடவும் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும். சஹ்ரானது தாக்குதல் இடம்பெற்ற போது ஏற்பட்டிருந்த நெருக்கடிக்கு மத்தியிலும் கல்வி அமைச்சர் என்ற வகையில் விரைவில் பாடசாலைகளை ஆரம்பித்திருந்தேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சியின் தொழிற்சங்க அமைப்புகளின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன. பாரடசாலைகளின் ஆரம்பம் தொடர்பில் இன்னமும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருக்க முடியாது. அவற்றை திறப்பதற்கான வேலைத்திட்டமொன்று தேவை. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான திகதியை அரசாங்கம் அறிவிக்கும் போது பாடசாலைகளை திறப்பதற்கான திகதிகளை ஏன் அறிவிக்க முடியாது. தேர்தல் திகதியை விடவும் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும். 

சஹ்ரானது தாக்குதல் இடம்பெற்ற போது ஏற்பட்டிருந்த நெருக்கடிக்கு மத்தியிலும் கல்வி அமைச்சர் என்ற வகையில் விரைவில் பாடசாலைகளை ஆரம்பித்திருந்தேன். இதற்கு முழுமையான பாதுகாப்புகளை பெற்றுக் கொடுத்திருந்தோம். இதன்போது பலரும் எம்மை விமர்சித்திருந்தனர். ஆனால் பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் அக்கறை செலுத்தியே நாம் இவ்வாறு செய்திருந்தோம்.

அரசாங்கம் தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுத்தருமாரு வேண்டுகோள் விடுத்து வருகின்றது. பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை சொகுசு பொருட்களின் விலைக்கு சமமாக உள்ளது. 

மக்கள் இன்றும் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். பிள்ளைகளுக்கு போஷாக்கை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையும் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. என்றார்.

No comments:

Post a Comment