சுகாதார அமைச்சினால் உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 9, 2020

சுகாதார அமைச்சினால் உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்கள்

(எம்.மனோசித்ரா)

உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 'பாதுகாப்பான உணவு சந்தை' என்ற தொனிப்பொருளில் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவினால் விசேட அறிவுறுத்தல்கள் அனைத்து உணவகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை கொரோனா வைரஸ் தொற்றினால் வெவ்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் அதிலிருந்து உணவு பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்றின் காரணமாக நாடு நீண்ட நாட்களுக்கு பின்னர் வழமைக்குத் திரும்பியுள்ள போதிலும் உணவகங்களை திறப்பது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய மீண்டும் உணவகங்களைத் திறக்கும் போது எம்மால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இவை உணவகங்களுக்கு மாத்திரமின்றி பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களால் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது ஆராயப்படும்.

எம்மால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில் அனைத்து வளாகங்களின் நுழைவாயில்களில் சவர்க்காரமும் நீரும் பாவித்து கைகளை கழுவுவதற்கு போதிய வசதிகள் செய்யப்படல் வேண்டும். 

ஒரு தடவையில் வளாகத்தினுள் அனுமதிக்கக் கூடிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் வளாக நுழை வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

வளாகத்திற்கு வெளியிலும் மற்றும் பணம் அறவீடு செய்யும் இடத்திலும் வாடிக்கையாளர்கள் வரிசையில் ஒரு மீற்றர் பாதுகாப்பு இடைவெளியை பேணுவதற்கு தரையில் நிலையான அடையாளம் இடப்படல் வேண்டும். இந்த அறிவிப்பு தெளிவாக வளாகத்தினுள் காட்சிக்கு வைக்கப்படல் வேண்டும்.

பொதி செய்யப்படாத உண்பதற்கு தயாராகவுள்ள உணவுகள் மூடி வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். 

உண்பதற்கு தயாராகவுள்ள உணவுகளை கையாள்பவர்களை கட்டாயமாக முகக் கவசம், கையுறை, தலையுறை மற்றும் மேலங்கி (Apron) அணிந்திருத்தல் வேண்டும். 

உண்பதற்கு தயாராகவுள்ள உணவுகளை கையாளும் போதும் விநியோகிக்கும் போதும் சுத்தமான உபகரணங்களை பாவித்தல் வேண்டும்.

ஒரு முறை பரிமாறப்பட்ட உணவு மீண்டும் வேறொருவருக்கு பரிமாறவோ அல்லது விற்பனை செய்யப்படவோ கூடாது என்பனவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் என்றார்.

No comments:

Post a Comment