(செ.தேன்மொழி)
கடந்த அரசாங்கத்தில் ஹோமாகம பிட்டிபன தொழிநுட்ப பூங்காவில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடத்திற்கு எதிராக பல்வேறுப்பட்ட விமர்சனங்களை முன்வைத்த அப்போதைய எதிர்த்தரப்பினர். தற்போது ஆளும் தரப்பில் இருந்து கொண்டு அதனை முன்னின்று திறந்து வைப்பதை விடவும் கீழ்த்தரமான செயல் வேறு எதுவுமில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இலங்கையின் தொழிநுட்ப வசதிகளை முன்னேற்றுவது தொடர்பில் உலக வங்கியினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய, உயிரியல் விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் நேரோ தொழிநுட்ப ஆய்வுக் கூடம் அமைப்பது தொடர்பில் அண்ணளவாக 500 பேர் வரையான விஞ்ஞானிகளிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு இதற்கான திட்டத்தை தயாரித்தது. ஹோமாகமவில் நேற்று திறந்து வைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்திற்கு அடிக்கல் நாட்டியது அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, தொழில் நுட்ப ஆய்வுகளை விரிவு செய்வதன் ஊடாக நாட்டின் வர்த்தக நடவடிக்கைகளை விருத்தி செய்ய முடியும் என உலக வங்கி வழங்கிய ஆலோசனையின் பேரில், அண்ணளவாக 500 பேர் வரையிலான விஞ்ஞானிகளிடம் ஆலோசனை பெற்றே இந்த திட்டம் தயாரிக்கப்பட்டது. புதிய முயற்சிகளுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலே கடந்த அரசாங்கம் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இந்த தொழிநுட்ப பீடத்தை அமைக்க எமது அரசாங்கம் தீர்மானித்தது.
புதிய முயற்சிகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீலங்கா டெலிக்கொம் நிறுவனம் ஆகியவற்றில் உருவாக்கப்பட்ட ஆய்வு கூடங்கள், ஆதர் ஸ்ரீ கிளார்க் நிலையத்தில் உருவாக்கப்பட்ட சந்திரிக்கா தொழிநுட்ப கூடம் மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட இந்த தொழிநுட்ப பீடமும் கடந்த அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கொரியாவுக்கு விஜயம் செய்து ஆராய்ந்து பார்த்திருந்தார்.
ஹேமாகம - பிட்டிபன பகுதியில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடத்திற்கு அப்போது பாரிய விமர்சனங்களை முன்வைத்தவர்கள் இன்று ஆளும் தரப்பில் இருந்துகொண்டு திறந்து வைப்பதை போன்று கீழ்தரமான செயல் வேறு எதுவும் இல்லை.
தேர்ததலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான திறப்பு விழாக்கள் ஊடாக தங்களது தேர்தல் நடவடிக்கைகளுக்கு இலாபம் ஈட்டிக்கொள்ள முயற்சித்துவரும் ஆளும் தரப்பினர். இந்த விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி பெற்றுக் கொண்டுள்ளார்களா என்பது தொடர்பில் விளக்கமில்லை என்றார்.

No comments:
Post a Comment