(எம்.எப்.எம்.பஸீர்)
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில், சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு பட்டியலை நிராகரிக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இது குறித்த ரீட் மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அளுவிஹார, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு வந்த போது நீதியரசர்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.
கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரான ஒஷலஹேரத் இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மூவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, எமது தேசிய முன்னணி கட்சியின் தவிசாளர் சேனக ஹரிப்பிரிய டி சில்வா, அதன் செயலர் டயானா உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மனு இன்று பரிசீலனை தொடர்பில் ஆராய எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே, அடிப்படை ஆட்சேபனங்களை முன்வைத்தார்.
குறித்த மனுவில் கூறப்படும் விடயங்கள் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்யும் விடயங்கள் எனவும், பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 8 (3) ஆம் அத்தியாயத்துக்கு அமைய உயர் நீதிமன்றுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக நடவடிக்கைகளில் தலையீடு செய்ய முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே வாதிட்டார்.
அத்துடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியொன்று, தனது கட்சியின் யாப்பை திருத்தியதாக அறிவித்தால், பொதுத் தேர்தல் சட்டத்தின் 8 (3) ஆம் அத்தியாயத்தின் கீழ் அதனை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதில் உள்ள உண்மை, பொய் தொடர்பிலும் கட்சிகளின் உள் விவகாரங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றுக்கு பிரதி சொலிச்ட்டர் ஜெனரால் நெரின் புள்ளே தெரிவித்ததுடன், அவ்வாறான பின்னனியில் இந்த மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றுக்கு எந்த அதிகாரமும் இல்லை என வாதிட்டார்.
இதன்போது, மனுதாரர் ஓஷல ஹேரத் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நெரஞ்சன் டி சில்வா, எமது தேசிய முன்னணியின் யாப்புக்கு அமைய வேறு கட்சியொன்றின் உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு எமது தேசிய முன்னணி கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாது.
அவ்வாறு இருக்கையில், எமது தேசிய முன்னணி கட்சியின் பெயரை, ஐக்கிய மக்கள் சக்தி என மாற்றி, அதன் தலைவராக சஜித் பிரேமதாஸவையும், செயலராக ரஞ்சித் மத்துமபண்டாரவையும் ஏற்றுக்கொண்டு கடந்த மார்ச் 12 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட கடிதம் அக்கட்சியின் யாப்புக்கு முரணானதாகும்.
எமது தேசிய முன்னணி கட்சியின் யாப்புக்கு அமைய, அக்கட்சியின் யாப்பை திருத்தும் அதிகாரம் அந்த கட்சியின் அகில இலங்கைச் செயலாளர்களுக்கு உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய திருத்தங்கள் அந்த செயற்குழு ஊடாக முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் வாதிட்டார்.
தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் கட்சியொன்றின் யாப்பை மாற்றும் போது, ஆணைக்குழுவை தெளிவுபடுத்த வேண்டிய விடயம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் அதனால் ஐக்கிய மக்கள் சக்தியை ஏற்றுக்கொண்ட ஆணைக் குழுவின் தீர்மானம் சட்ட விரோதமானது எனவும் சட்டத்தரணி நெரஞ்சன் டி சில்வா வாதிட்டார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸ, செயலர் ரஞ்சித் மத்தும பண்டார சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இம்மனுவானது எந்த அடிப்படையும் அற்றது என்பதால் அதனை தள்ளுபடி செய்யுமாறு கோரினார். முன்வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்றம் குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய தீர்மானித்து அறிவித்தது.

No comments:
Post a Comment