(நா.தனுஜா)
உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கும், மக்களின் ஜனநாயக உரிமைக்கும் கிடைத்த பாரிய வெற்றியாகுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து பாதுகாப்பான முறையில் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான ஆலோசனைகள் உள்ளடங்கிய கடிதமொன்றை நாம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்திருக்கின்றோம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பாரிய வெற்றியைப் பெறுவதே எமது ஒரே இலக்காகும்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்பது முன்னரே எதிர்வுகூறப்படாத ஒரு விடயமாகும். எனவே இந்த நெருக்கடி நிலைக்கு அரசாங்கம் காரணமில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேபோன்று போதைப் பொருள் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சிறைச்சாலை அதிகாரிகளுடன் சந்திப்பை நிகழ்த்தியிருந்தமை வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது ஜனநாயக உரிமையைப் பறிக்க முற்பட்ட தரப்புக்களுக்கான உரிய பதிலடியை மக்கள் வழங்குவார்களென எதிர்பார்க்கிறோம் எனக் கூறினார்.
No comments:
Post a Comment