(இராஜதுரை ஹஷான்)
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ண ஜீவன் ஹூல் ஆணைக்குழுவின் கூட்டுப்பொறுப்பிற்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் செயற்படுவதாக குற்றஞ்சாட்டி இவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை சுயமாக துறக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று புன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதே ஆளும் தரப்பினரினதும், பெரும்பாலான மக்களினதும் பிரதான அரசியல் எதிர்பார்ப்பாக உள்ளது. கொவிட்-19 வைரசுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுப்படுகின்றது. அவ்வாறாயின் பாதுகாப்பான முறையில் பொதுத் தேர்தலை நடத்துவது தவறேதும் கிடையாது.
பொதுத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய பொறுப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ண ஜீவன் ஹூல் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டுப்பொறுப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார். என்ற பின்னணியில் இவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவர் சுயமாக பதவி துறப்பது பொருத்தமாக அமையும்.
பெருந்தோட்ட மக்கள் காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகனிற்கு அரசியல் ரீதியில் உரிய ஆதரவினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியலில் செல்வாக்கு செலுத்தும் போது அரசியல் ரீதியான பாடத்தை இயல்பாகவே கற்றுக் கொள்ளலாம். பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் ஆதரவினை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என்றார்.
No comments:
Post a Comment