(செ.தேன்மொழி)
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதான போட்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலானதாகவே இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதற்கல்ல, ஆட்சியை கைப்பற்றுவதற்கே போட்டியிடுகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு யார் விலகிச்சென்றாலும் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் விலகிச் சென்றவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாது கட்சிக்குள் தற்போது இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டாலே போதும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே தீர்வு காணமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் நேற்று திங்கட்கிழமை கட்சியின் தொழிற்சங்கம் அமைப்புகளின் உறுப்பினர்களுடன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, தொழிற்சங்கங்களுக்கான தலைவர் ரங்கே பண்டார ஆகியோர் எதிர்வரும் பொத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் அவர்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
மேலும் கூறியதாவது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மிகப் பழைமை வாய்ந்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே. ஐக்கிய தேசியக் கட்சி பல தேர்தல்களில் தோல்வியுற்றிருந்தாலும் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. எப்போதும் முன்னேறிச் செல்லவே முயற்சித்திருக்கின்றது.
தற்போது நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே பிரதான கட்சிகளாக இருக்கின்றன. பாராளுமன்ற தேர்தலில் இந்த இரு கட்சிகளுக்கிடையிலேயே பிரதான போட்டி இடம்பெறப்போகின்றது. இந்நிலையில் நாங்கள் எதிர்கட்சியாக வருவதற்கல்ல ஆட்சியை கைப்பற்றுவதற்கே முயற்சித்து வருகின்றோம்.
கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் நாங்கள் அரசியல் செயற்பாடுகளை புறந்தள்ளி விட்டு, நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்தோம். இது ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமல்ல பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள அரசியல் கட்சிகள் பலவும் இவ்வாறு முன்மாதிரியாக செயற்பட்டிருந்தன.
ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது, பொருளாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகளில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற மக்களுக்கு நிதியுதவியையோ சலுகைகளையோ பெற்றுக் கொடுக்காமல் இருக்கின்றது. மார்ச் மாதத்திற்கு முன்னர் இருந்த நிலைமை தற்போது இல்லை. அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை நாம் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் பாடமொன்றை கற்றுக் கொண்டுள்ளோம். இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து யானை சின்னத்திலும், பொதுக்கூட்டணி அமைத்து அன்னம் சின்னத்திலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளது. இதன்போது பலர் வெற்றி கண்டுள்ளதுடன் தோல்வியுற்றாலும் கிடைக்கப் பெற்ற வாக்கு வீதங்களில் பாரிய வித்தியாசம் ஏற்பட்டதில்லை.
ஆனால் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எம்மைவிட 14 இலட்சம் அதிக வாக்குகளை பெற்று வெற்றி கொண்டுள்ளார். இதற்கான காரணம் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவ்வளவு காலமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த பலரும் கோத்தாபயவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் மீண்டும் இந்த பிழையை விடுவதற்கு நாங்கள் விரும்பவில்லை என்றார்.

No comments:
Post a Comment