ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு - ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு - உப தலைவர்களுக்கு கூடிய பொறுப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு - ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு - உப தலைவர்களுக்கு கூடிய பொறுப்பு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரிய முறையில் நிரப்பும் வரையில், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்த இடைக்கால நிர்வாகக் குழுவில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர் எஸ்.சிவராஜா, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக செயற்பாட்டுக்கான உப தலைவர் எம்.மாரிமுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளர் எம். ரமேஷ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்றும் உயர்பீடம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைப்படி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது அவரைத் தொடர்புகொள்ள முடியாத பட்சத்தில் அவசர முடிவுகளுக்கு இவ் ஐவர் அடங்கிய குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே தெரிவித்திருந்தமைக்கு அமைய, இந்த இடைக்கால நிர்வாகக் குழு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜாவால் நியமிக்கப்பட்டுள்ளது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளுக்கு முன்னர், கட்சியின் போசகர் முத்து சிவலிங்கம் தலைமையில் கூடிய பொதுக்குழுவே, இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான், கணபதி கனகராஜ், சக்திவேல் ஆகியோரில் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து செந்தில் தொண்டமான் விலகி, அவரின் வெற்றிடத்திற்கு கட்சியின் உப தலைவர் மதியுகராஜா நியமிக்கப்படவுள்ளதாக உட்கட்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக இராஜதுறை தொடர்கின்றார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் செயற்படும் அதேவேளை, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஜீவன் தொண்டமான் போட்டியிடவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களுக்கு மீண்டும் கூடிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது மருமகனான செந்தில் தொண்டமான் ஆகியோர் இணைந்து கட்சியை முன்னோக்கிக்கொண்டு சென்றால் மாத்திரமே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எதிர்காலம் சிறப்பாக அமையுமென பலரும் கருத்துத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment