(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி தேர்தலின் வெற்றி பொதுத் தேர்தலின் வெற்றியிலே முழுமைபெறும். பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க நாட்டு மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முரண்பாடற்ற அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள முடியும் என்றும் கூறினார்.
கல்கமுக பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனைக் கூறிய அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்கால தலைமுறையினருக்காக நாட்டின் தேசிய வளங்கள் பாதுகாக்கப்படும். 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நாம் தோல்வியடைந்தோம்.
அவ்வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட அனுமதி கிடைக்கப்பெற்றது. நான் நாட்டுக்கு செய்த சேவையின் காரணமாக மக்கள் என்னை ஆதரித்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்பி வைத்தார்கள்.
நாட்டின் தேசிய வளங்கள் பாதுகாக்கப்படும் கடந்த அரசாங்கம் அபிவிருத்தி பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை. எமது அரசாங்கம் செய்த அபிவிருத்தி பணிகளை கடந்த அரசாங்கம் மலினப்படுத்தியது. அரசியல் தேவைகளின் காரணமாக பல அபிவிருத்தி திட்டங்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்டன. இதன் பாதிப்பினை சாதாரண மக்களே எதிர்கொண்டார்கள்.
தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரைவார்ப்பது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிர்மாணித்த அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துறைமுகத்தின் பயனை நாம் பெற முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்தை விற்பதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எமது எதிர்ப்பினால் அது தடைப்பட்டது. தேசிய வளங்களை பாதுகாப்பது எமது பிரதான நோக்கமாகும்.
ஜனாதிபதியும், பிரதமரும் முரண்பட்ட விதத்தில் செயற்பட முடியாது. நாட்டை நிர்வகிக்கும் இரண்டு தலைவர்களும் ஒன்றினைந்து செயற்படாவிட்டால் ஏற்படும் விளைவுகள் நல்லாட்சியில் ஏற்பட்டன. இவர்களின் முரண்பாடுகளினால் தேசிய அடிப்படையிலும், நாடு என்ற ரீதியிலும் பலவீனமடைந்துள்ளோம். இதனை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் ஊடாக திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment