ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் இப்பயணத்தை எவராலும் மாற்ற முடியாதென அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க லங்காராம விகாராதிபதி ரலபனாவே தம்மஜோதி தேரர் தெரிவித்தார்.
பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தூற்றிக்கொள்ளும் அரசியல் மேடைகளுக்கு அப்பால் தமது கொள்கையை மிகச் சரியாகவும் அச்சமற்றும் முன்வைத்த ஒரேயொரு தலைவர் கோத்தாபய ராஜபக்ஷவே என தேரர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோத்தாபய நேற்று ஞாயிற்றுக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க லங்காராம விகாரைக்கு சென்று விகாராதிபதி ரலபனாவே தம்மஜோதி நாயக்க தேரரை சந்தித்தபோதே தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசிர்வதித்த தம்மஜோதி தேரர், நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தார். லங்காராம வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரையை வழிபட்டதன் பின்னர் ஜனாதிபதி, மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.
விகாரைக்கு வருகை தந்திருந்த மக்களும் ஜனாதிபதியின் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க இசுறுமுனிய விகாரையின் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
ஜனாதிபதி, விகாராதிபதி பேராசிரியர் மதவ ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். விகாரையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.
ஜனாதிபதி விசேட விருந்தினரின் நினைவு பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். விகாரை பற்றிய வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை உள்ளடக்கிய பல புத்தகங்களையும் விகாராதிபதி ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.
No comments:
Post a Comment