புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் இன்று (02) அதிகாலை விபத்திற்குள்ளானதில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக, கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பன்பொல, அம்பலகொலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான டி. எம். பிரியந்த (30) எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குரிய பொலிஸ் நடவடிக்கை பிரிவில் பணியாற்றியவர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டிலிருந்து புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு கடமைக்காகச் சென்று கொண்டிருந்தபோது, புத்தளம் அநுராதபுர வீதியின் தப்போவ நீர்த்தேக்கத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு கொங்கிரீட் கட்டையில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவ்விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(புத்தளம் எம்.எஸ். முஸப்பீர், கற்பிட்டி ரஸீன் ரஸ்மின்)
No comments:
Post a Comment