(எம்.மனோசித்ரா)
அரசியல் கட்சியொன்று தொழிற்சங்கத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அரசியல் பழிவாங்கலுக்காக தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் யாப்பை மீறி நடவடிக்கை எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
இராஜகிரியவிலுள்ள தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயற்பாடுகளிலிருந்து எம்மை இடைநீக்கியுள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திற்கு தனியான யாப்பு காணப்படுகிறது. இந்த சங்கத்தில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். இந்த சங்கம் அதன் யாப்பிற்கமைய சட்ட ரீதியாக நடத்திச் செல்லப்படுகிறது. எனவே யார் எந்த தீர்மானத்தை எடுப்பதாக இருந்தாலும் அரசியலமைப்பிற்கு அமையவே எடுக்க வேண்டும்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஹரின் பெர்னாண்டோ இந்த சங்கத்தின் தலைவராகவும் நாம் பொதுச் செயலாளராகவும் செயற்குழுவினால் நியமிக்கப்பட்டோம். இந்நிலையில் அரசியல் பழிவாங்கலுக்காக எம்மீது குற்றஞ்சுமத்தி சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேக்கா ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய போதும் 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய போதும் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் அந்த வேட்பாளர்களின் வெற்றிக்காகவே செயற்பட்டது. அதேபோன்றே இம்முறையும் செயற்ப்பட்டது. இவ்வாறிருக்கையில் எம்மை பதவியிலிருந்து நீக்குவதற்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும் ?
அரசியல் பழிவாங்கலுக்காக எம்மை பதிவியிலிருந்து நீக்க முடியாது. அரசியல் கட்சியொன்று தொழிற்சங்கத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இவ்வாறான தொழிற்சங்கங்கள் இன்றி ஜனாதிபதியொருவரை தெரிவு செய்ய முடியாது என்றார்.

No comments:
Post a Comment