வட மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை - ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

வட மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை - ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

வட மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

புதன்கிழமை ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே வட மாகாண ஆளுநர் மேற்கண்ட வலியுறுத்தலைச் செய்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வட மாகாண பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்காக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அளப்பரிய சேவைகளை பாராட்டுக்கின்றேன். தற்போது வடக்கு மாகாணத்தில் சட்டத்திற்கு விரோதமான முறையில் சமுதாயத்தைப் பாதிக்கின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக, சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை, களவுகள் மற்றும் வாள்வெட்டு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், வீதி விபத்துக்கள் ஆகியன தொடர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

முக்கியமான மணல் அகழ்வை முறையான சட்டங்களுக்கு உட்படுத்தி அதற்கான அனுமதிகளை வழங்கி தேவைப்படும் பட்சத்தில் மட்டும் மணல் அகழ்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது. மணல் அகழ்வு வியாபாரம் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தை பாதிக்கின்ற வகையில் களவு, வாள் வெட்டு, போதைப்பொருள் விற்பனை போன்ற விடயங்களின் பின்னணிகள் உள்ளிட்ட அனைத்துக் காரணங்களையும் கண்டறிந்து அவற்றை தடைசெய்வதோடு நிலைமகளை முற்றாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

வீதிவிபத்துக்கள் தொடரும் நிலையில் அதற்கான காரணற்களை முழுமையாக ஆராய்ந்து போக்குவரத்துச் சட்டங்களை இறுக்கமாக பின்பற்றுவதோடு சட்டத்தை மீறுவோருக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும்.

இதுபோன்ற சட்டவிரோதமான விடங்களை தடுப்பதன் ஊடாகவே எமது மாணவர்களையும், இளம் சந்ததியினரையும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் நேரிய முன்னேற்றப்பாதையொன்றில் இட்டுச் செல்லமுடியும்.

அச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக கிராம அலுவலர்கள் முதல் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாருக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

அதன் மூலமே எமது சமுதாயத்தை கண்ணியமுள்ள ஒழுக்கமான சமுதாயமாக முன்னேற்றம்மிக்கதாக மாற்றமுடியும் என்பதை கருத்திற்கொள்ள வேண்டிடும்.

மிக முக்கியமாக பாடசாலைகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். அத்துடன் பாடசாலை மாணவர்களுக்காக பாடசாலை கால அட்டவணையையும், அரச மற்றும் தனியார் பேருந்துக்களின் கால அட்டவணையையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய கால அட்டவணையை தயார் செய்து நடைமுறைப்படுத்த போக்குவரத்துத் அதிகாரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சமுதாய நலனில் அக்கறை கொள்ளவேண்டிய மாணவர்களையும் இளைஞர் யுவதிகளையும் உருவாக்க திணைக்களங்கள் தங்களுக்கான அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது என்றார்.

வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், விசேட பொலிஸ் செயலணியின் உறுப்பினர்கள், மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், உள்ளுர் அதிகாரசபை ஆணையாளர், கல்வித்திணைக்கள செயலாளர், உள்ளுர் அதிகாரசபை செயலாளர், போக்குவரத்துத் அதிகாரசபை தலைவர் மற்றும் செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் உதவிச்செயலாளர், ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment