வி.எம்.எஸ் செயற்படாத மீன்பிடி கலங்களின் உரிமையாளர்களிடம் சேவைக் கட்டணம் அறவிட வேண்டாம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

வி.எம்.எஸ் செயற்படாத மீன்பிடி கலங்களின் உரிமையாளர்களிடம் சேவைக் கட்டணம் அறவிட வேண்டாம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வி.எம்.எஸ் (Vessel monitoring system) எனப்படும் ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலங்களுக்கான அவதானிப்பு பொறிமுறையை சீர் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வி.எம்.எஸ் பொறிமுறையின் வினைத்திறனான செயற்பாடு உறுதிப்படுத்தப்படும் வரை அதற்கான சேவைக் கட்டணம் அறவிடப்படுவதை இடை நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

வி.எம்.எஸ் கருவிகளின் செயற்பாடு தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் (03.06.2020) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சில் இடம்பெற்ற நிலையிலேயே குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச ஏற்றுமதி நியமங்களுக்கு அமைய கடற்றொழிலில் ஈடுபடுகின்ற ஆழ்கடல் மீன்பிடிப் பலநாள் கலங்களுக்கு கடற்றொழில் திணைக்களத்தினால் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் வி.எம்.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இதுவரை நாடளாவிய ரீதியில் சுமார் 1500 ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களுக்கு குறித்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்காக மாதாந்த சேவைக் கட்டணமும் அறவிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வி.எம்.எஸ் கருவிகளின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள், சுமார் 600 கலங்களில் மாத்திரமே குறித்த கருவி செற்படுவதாகவும் ஆனால் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான செயற்படாத கருவிகளுக்கும் மாதாந்த சேவைக் கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் வி.எம்.எஸ் சேவையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் குறித்த சேவை வினைத்திறனாக மேற்கொள்ளப்படுவதுடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலங்களுக்கும் பொருத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சேவை சீராக தொழிற்படும் வரை மாதாந்த சேவைக் கட்டணம் அறவிடப்படுவதை இடை நிறுத்துமாறும், தொடர்பிலக்கம் ஒன்றை வழங்கி அதனூடக வி.எம்.எஸ் கருவிகள் செயற்படாத கலங்களின் உரிமையாளர்கள் விபரங்களை தெரிவிப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில், அமைச்சரின் அறிவுறுத்தலை உடனடியாக நடைமுறைப்படுத்;திய கடற்றொழில் திணைக்களம், வி.எம்.எஸ் கருவிகள் தொழிற்படாத மீன்பிடிக் கலங்களின் உரிமையாளரகள் 011 3010031, 011 4323389 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக தகல்களை வழங்கினால் அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதுவரை சேவைக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது எனவும் கடற்றொழில் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment