ஐக்கிய தேசிய கட்சியை நாசமாக்கி, அனாதை மடமாக மாற்றி, ராஜபக்ஷக்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரணில் செயற்படுகிறார் - ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

ஐக்கிய தேசிய கட்சியை நாசமாக்கி, அனாதை மடமாக மாற்றி, ராஜபக்ஷக்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரணில் செயற்படுகிறார் - ஐக்கிய மக்கள் சக்தி

(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய கட்சியை அனாதை மடமாக்கி ராஜபக்ஷக்களின் உடன்படிக்கைகளுக்கு அமைய செயற்படுத்தும் கட்சியாக அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாற்றிவிட்டார் எனவும், ஐக்கிய தேசிய கட்சியை கைப்பற்றி இளம் தலைமுறையின் கீழ் கொண்டுவருவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இரண்டு அணியாக செயற்பட்டு வருகின்ற நிலையில் கட்சியாக ஒன்றிணைய முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லையா என கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசிய கட்சியின் மீதான பற்றும் அக்கறையும் எமக்கு இன்றும் உள்ளது. நாம் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியாக அரசியலில் இணைந்து செயற்பட்டவர்கள். அவ்வாறு இருக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவமே சஜித் பிரேமதாசவை கூட்டணியின் தலைவராக்கியது.

அந்த கூட்டணியே இன்றும் செயற்பட்டு வருகின்றது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களுடன் உடன்படிக்கைகளை முன்னெடுத்து செல்கின்றார் என்ற சந்தேகமே இன்று எம் அனைவருக்கும் தோன்றுகின்றது. 

ஐக்கிய தேசிய கட்சியை நாசமாக்கி கட்சியை அனாதை மடமாக மாற்ற வேண்டும், ராஜபக்ஷக்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயற்பட்டு வருகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு இன்று இளம் தலைமைத்துவமே தேவைப்படுகின்றது. தலைமைத்துவம் மாற்றப்பட்டு சகலரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இன்று ஒரு அணியாக ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தில் இயங்க தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் அனைவருமே செயற்பட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியையும் முழுமையாக எமது கட்சியாக்க வேண்டும். இளம் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியை வழிநடத்த வேண்டும்.

பொதுத் தேர்தலின் பின்னர் இந்த மாற்றங்கள் நிச்சயமாக இடம்பெறும். ஐக்கிய தேசிய கட்சியும் எமது கட்சியாகும். சஜித் பிரேமதாசவின் கீழ் கட்சியை வழிநடத்துவோம். வெகு விரைவில் ஐக்கிய தேசிய கட்சியை நாமே கைப்பற்றுவோம்.

இன்று ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட களமிறக்கப்பட்டுள்ள அனைவருமே அரசியலில் வியாபாரம் செய்ய நினைக்கும் நபர்கள்.

அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதன் ஒரே நோக்கம் தாம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும். வியாபாரிகள், கள்ளர்கள், குற்றவாளிகளின் பட்டியலை ஐக்கிய தேசிய கட்சி கொண்டுள்ளது. அவர்களை நிராகரிக்க வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது.

ஆகவே தூய்மையான தலைமைத்துவமும் மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு செயற்படும் உறுப்பினர்களும் எம் தரப்பில் உள்ளனர். நாம் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமருவோம். அதேபோல் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியையும் எமது கட்சியாக்குவோம் என்றார்.

No comments:

Post a Comment