ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபரும், மத்திய வங்கி ஊழல்வாதிகளும் அரசாங்கத்துடன் "டீல்" அரசியலில் - நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபரும், மத்திய வங்கி ஊழல்வாதிகளும் அரசாங்கத்துடன் "டீல்" அரசியலில் - நளின் பண்டார

(ஆர்.யசி)

சஹரானின் தற்கொலை தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபரும், மத்திய வங்கி பிணைமுறி ஊழலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய முக்கிய நபர்களும் இன்று அரசாங்கத்துடன் உள்ளனர். குற்றவாளிகளை தண்டிக்கும் உண்மையான நோக்கம் அரசாங்கத்திற்கு இருக்குமாயின் அவர்களை தண்டிக்க வேண்டும் என்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி எடுத்து வருகின்ற அதிரடி தீர்மானங்கள் குறித்து விமர்சனக் கருத்துக்களை முன்வைக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், குற்றவாளிகளை தண்டிக்க ஜனாதிபதி பல வேலைத்திட்டங்களை உருவாக்கி வருகின்றார். செயலணிகள் உருவாக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படுகின்றது. ஆனால் கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதலை நடத்திய குற்றவாளிகளை இயக்கிய நபர்கள் மற்றும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.

ஈஸ்டர் தினத்தில் சஹரானின் மூலமாக நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டிய பிரதான நபர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவேயாகும்.

பாதுகாப்பு அமைச்சு அவரின் கீழ் செயற்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக பல எச்சரிக்கைகள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே முதல் பொறுப்பாளி முப்படைகளின் பிரதானியும், பாதுகாப்பு அமைச்சருமான அவரேயாகும்.

அதுமட்டுமல்ல மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் பொறுப்புக்கூற வேண்டிய நபர்களும் இன்று ராஜபக்ஷக்களுடன் "டீல்" அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களையும் தண்டிக்க வேண்டும். வெறுமனே அர்ஜுன மகேந்திரனை தேடிக்கொண்டு ஏனையவர்களை விட்டுவிட அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஆனால் அப்போதும் அதிகாரத்தில் இருந்தவர்கள் பொறுப்புக்கூறியாக வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் இன்று அரசாங்கத்துடன் ஏதோ ஒருவிதத்தில் ஒட்டிக்கொண்டு உள்ளவர்கள். அவர்களை காப்பாற்றவே அரசாங்கமும் முயற்சிக்கின்றது.

குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும், நாட்டினை நாசமாக்கிய நபர்கள் தப்பிக்கக் கூடாது என அரசாங்கம் கூறுவது உண்மையென்றால் முதலில் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இன்றுவரை அவ்வாறு எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

நாட்டில் வருமானம் அதிகரிக்கும் துறைகளை மூடிவிட்டு தமது தனிப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

தேசிய உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் தேசிய உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. உர மானியம் வழங்கப்படவில்லை. 

பெற்றோல் விலை உலக சந்தையில் மிகக் குறைவாக கிடைக்கின்ற போதிலும் இங்கு அதிக விலையில் மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இதுதான் ராஜபக்ஷக்களின் ஆட்சி முறைமை என்பதை மீண்டும் நிருபித்துவிட்டனர் என்றார்.

No comments:

Post a Comment