(எம்.மனோசித்ரா)
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.
அந்த கட்சிக்கு எதிரான கருத்தினை பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட அந்த கட்சியின் உறுப்பினர்கள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடளித்திருந்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பேராசிரியர் ஹூல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நேரடியாகக் கூறும் வகையில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அமைந்துள்ளன.
நாம் கட்சி என்ற ரீதியில் இவ்வாறு முறைப்பாடளிக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுவொன்றின் உறுப்பினராக சேவையாற்றுபவர், அவரது தனிப்பட்ட இனவாத செயற்பாடுகளுக்கு ஏற்ப செயற்படாமல் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு அதன் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட வேண்டும்.
இதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், இவ்விடயம் தொடர்பில் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்ன என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்துமாறும், எமது கட்சிக்கு இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடளித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் எம்மிடம் தெரிவித்தார். இது எமது கட்சிக்கு எதிரான செயற்பாடு மாத்திரமல்ல. நாட்டுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது மக்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கையை இல்லாமலாக்கும் செயற்பாடுமாகும் என்றார்.

No comments:
Post a Comment