மீள நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு இலவச பி.சி.ஆர். பரிசோதனை - லெபனான் அரசு இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

மீள நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு இலவச பி.சி.ஆர். பரிசோதனை - லெபனான் அரசு இணக்கம்

மீள நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு இலவச பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு லெபனான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பான இலங்கையின் கொள்கைகளுக்கு அமைவாக, லெபனான் தொழில் அமைச்சர் லமியா யம்மின் அம்மையாருடன் இலங்கைத் தூதுவர் ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன தொழில் அமைச்சு வளாகத்தில் வைத்து ஜூன் 01 ஆந் திகதி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கலந்துரையாடப்பட்ட விடயங்களில், கோவிட்-19 தொற்று நோய் நிலைமை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள், லெபனானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு தொழில்கள் கிடைக்காமை, செலுத்தப்படாத ஊதியம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் ஆகியன உள்ளடங்கும். 

லெபனான் முழுவதும் பரவியுள்ள தேவையுள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தணிப்பதற்காக தூதரகம் முன்னெடுத்த தற்காலிக நடவடிக்கைகள் குறித்தும் மேலும் கலந்துரையாடினர்.

நாடு திரும்புவர்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை தூதரகம் முன்னெடுப்பதற்காக, பி.சி.ஆர். பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளுமாறு இலங்கைத் தூதுவர் லெபனானிடம் உதவி கோரினார். 

வெளியேறும் வீசாவிற்கான அனுமதியைப் பெறுவதற்காக ஏற்கனவே பொதுப் பாதுகாப்புப் பணிப்பாளருக்கு (குடிவரவுத் திணைக்களம்) சமர்ப்பிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை அமைச்சர் கோரியதுடன், அபராதங்களுக்கு விலக்கு அளிப்பதற்காக தொழில் அமைச்சின் தலையீட்டையும் கேட்டுக்கொண்டார். 

கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அமைச்சர் ஒப்புக்கொண்டதுடன், தூதரகம் பேணி வருகின்ற 24 மணி நேர தொலைபேசி அழைப்பு வசதிகள் குறித்தும் விசாரித்தார். தொழிலாளர்கள் லெபனான் தொழில் அமைச்சுடன் தொடர்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்வதாயின், 100 அமெரிக்க டொலர் என்ற கட்டண அமைப்புக்குப் பதிலாக அவர்களில் நபர் ஒருவருக்கு தலா 20 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தொழில் அமைச்சு தூதரகத்திற்கு அதே நாளில் அறிவித்ததுடன், 2020 ஜூன் 4 ஆந் திகதி அறிவிக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானங்களில், 20 அமெரிக்க டொலர் கட்டண அறவீட்டினை லெபனான் தள்ளுபடி செய்து, தூதரகத்தின் கோரிக்கைக்கு அமைய அது இலவசமாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

திரும்பி வருபவர்கள் பட்டியலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், லெபனானின் தீர்மானம் இலங்கை அரசாங்கத்துக்கு கணிசமான அளவு நிதியை மிச்சப்படுத்துகின்றது.

இலங்கையிலிருந்து குடியேறிய தொழிலாளர்கள் தொடர்பான நிலுவையிலுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த ஒப்பந்தம், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் குறித்து தூதுவரும் அமைச்சரும் கலந்துரையாடினர்.

தூதரகத்தின் ஆலோசகர் (ஈ மற்றும் டபிள்யூ) பி.கே.டி. ஹெட்டியாராச்சி மற்றும் அமைச்சின் சர்வதேச விவகாரத் திணைக்களத்தின் தலைவர் டெனிஸ் தஹ்ரூஜ் ஆகியோர் இந்த சந்திப்பின் போது கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment