(எம்.ஆர்.எம்.வஸீம்)
அடுத்த வருடத்துக்கு மாணவர்களை முதலாம் தரத்துக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களில் வாக்காளர் பதிவை உறுதிப்படுத்த தேவையான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ளலாம். தேர்தல்கள் காரியாலயங்களில் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடுத்த வருடத்துக்கு முதலாம் தரத்துக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக கோரப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தில் பதிவை உறுதிப்படுத்துவதற்கு 5 வருடங்களுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு வாக்காளர் பெயர்ப் பட்டியலை உறுதிப்படுத்த தேவையானர்கள் அது தொடர்பான தகவல்கள் கிராம சேவை அதிகாரிகள் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ளலாம்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவிடுவதன் மூலம் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
கோவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களை முதலாம் தரத்துக்கு இணைத்துக் கொள்வதற்கு தேவையான வாக்காளர் இடாப்பு பெயர்ப் பட்டியலை பெற்றுக் கொள்ள மாவட்ட தேர்தல்கள் காரியாலயங்களுக்கு செல்வதை பெற்றோர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். தேர்தல்கள் காரியாலயங்கள் ஊடாக குறித்த தகவல்கள் வழங்கப்படமாட்டாது என்றார்.
No comments:
Post a Comment