அம்பாரை மாவட்டத்தை சூழ்ந்துள்ள ஒருசில இனவாதிகளின் கழுகுப் பார்வையிலிருந்து எமது சமுகத்தை பாதுகாக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரிப்போம். அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் 3 எம்பீக்களை பெற்றுக் கொள்ளும். அதற்கான வியூகம் - மக்கள் பலத்துடன் தலைவரால் வகுக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் கட்சியின் தேசிய பிரதி பொருளாளரான எ.சி.எஹியாகான்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, காலம் காலமாக சில வங்குரோத்து அரசியல் வாதிகள் கூறி வருவதைப் போல் இம்முறையும் முகா பாரிய சரிவைச் சந்திக்கும் என்று உளறித்திரிவதை அவதானிக்க முடிகிறது. இவர்களின் உளறல்களுக்கு மாற்றமாகத்தான் தேர்தல் முடிவுகள் முகாவின் செல்வாக்கை உயர்த்தி காட்டி நிற்கின்றன.
அம்பாரை மாவட்டத்தில் முகா வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறி மாற்றுக்கட்சிகளின் புதிய வேட்பாளர்கள் பகற்கனவு கண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. உண்மையில் அவர்களது பகற்கனவை நினைக்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது.
அம்பாரை மாவட்டத்தை இன்று - என்றுமில்லாதவாறு ஒருசில இனவாதிகளின் கழுகுப் பார்வைக்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிகின்றோம். மட்டு. மாவட்டத்திலிருந்து வந்து கல்முனையை துண்டாட முயற்சி எடுக்கப்படுகின்றது.
இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க வேண்டுமானால் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். அந்த ஒற்றுமையை நாம் மக்களின் அதிக செல்வாக்கை பெற்ற முஸ்லிம் காங்கிரசுடன் சங்கமிக்கும் போது எமது பிரதிநிதித்துவத்தையும் அதிகரித்து இனவாதிகளையும் துரத்தியடிக்க முடியும்.
கட்சியின் தேசியத் தலைவர் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி முன்னாள் எம்பி மற்றும் ஏனைய மாவட்ட இரு எம்பீக்களும் கல்முனையின் பாதுகாப்பு விடயத்தில் எடுத்துக் கொண்ட துணிகரமான செயற்பாடுகள் யாவரும் அறிந்ததே. அந்த துணிச்சல் புதிய வேட்பாளர்கள் எவரிடமும் கிஞ்சித்தும் இல்லை. இருப்பதற்கு வாய்ப்புமில்லை.
அந்த வகையில் கல்முனை தொகுதி மக்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர். எவர் எம்மையும் எமது பகுதியையும் பாதுகாப்பர் என்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அதேபோன்றுதான் ஏனைய தொகுதி மக்களும் சரியான நிலைப்பாட்டை எடுத்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பான வேட்பாளர்களை இனங்கண்டுள்ளனர்.
இன்றுள்ள சூழ்நிலையில் எமக்கு தேவைப்பட்டது சமூக பார்வையை முன்னிலைப்படுத்தும் பாராளுமன்ற பிரதிநிதித்துவமே. அவ்வாறானோரே இன்று முகாவின் வேட்பாளர்கள்.
எனவே, பாராளுமன்ற ஆசனத்துக்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்படுவோரை சற்று ஒதுங்கச் சொல்லிவிட்டு முஸ்லிம் சமுகத்தை பாதுகாக்க துடிக்கும் அதற்கான எண்ணத்தோடு செயற்படும் முகாவையும் அதன் வேட்பாளர்களையும் ஆதரித்து சமுகத்தை காப்போம் .
அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்று - ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வுக்கும் அரசாங்கம் , முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு - இவர்களின் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் எஹியாகான் தனது அறிக்கையில் சுடாடிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment