ஹோமாகமவில், இலங்கையின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டரங்கை நிர்மாணிக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முடிவு தொடர்பில், பல்வேறு கருத்துகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன தனது விமர்சனத்தை தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹானாமவும் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமகமவில் இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டதோடு, அது தொடர்பில் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், தனது தேர்தல் ஆசனமான, ஹோமாகம, தியகம பகுதியில் 26 ஏக்கரில், சுமார் 30-40 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், 40,000 பேர் அமரக்கூடிய வகையில் குறித்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிக்கவுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் குறித்த நிர்மாணத்திற்கான திட்டங்களையும் வெளிப்படுத்தினார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், குறித்த பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கு ஆரம்பிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை, கடந்த நல்லாட்சி அரசு நிறுத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த பகுதியிலுள்ள 26 ஏக்கர் காணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் இந்நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அதற்கு அடுத்த நாள், இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், தேசிய அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன, எமக்கு இன்னுமொரு கிரிக்கெட் அரங்கு தேவைதானா என, தனது ட்விற்றர் கணக்கில் கேள்வியொன்றை விடுத்திருந்தார்.
1,133 people are talking about this
"நாம் தற்போது உள்ள விளையாட்டரங்குகளில் போதிய அளவிலான சர்வதேச போட்டிகளையோ, உள்ளூர் முதற்தர போட்டிகளையோ விளையாடாத நிலையில், எமக்கு மற்றுமொரு விளையாட்டரங்கு தேவைதானா?"
என்று கேள்வியெழுப்பியிருந்தார். இந்த கருத்து தொடர்பில் ஒரு சில அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், மஹேல ஜயவர்தன மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரின் மீது சமூக வலைத்தளங்களில் சேறு பூசும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் ஐ.சி.சி போட்டி நடுவருமான ரொஷான் மஹானாம, முதலில் எமது நாட்டில் விளையாட்டை வளர்ப்பது மிகவும் முக்கியமானது என தெரிவித்திருந்தார்.
"நாம் இந்த நேரத்தில் நிதிகளை வீணாக்காமல் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்க ஒரு நல்ல வேலைத்திட்டத்தையே செய்ய வேண்டும். விளையாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள பலர் தற்போது பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களைக் கவனிப்பது முக்கியமாகும்” என்று அவர் தனது கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன், மேலும் கடன்களை அதிகரிக்காமல், ஏற்கனவே அம்பாந்தோட்டை கிரிக்கெட் மைதானத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தனது ட்விற்றர் கணக்கில் கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மஹேலவின் கருத்தை ஆமோதித்துள்ளார்.
மஹேல ஜயவர்தனவின் ட்விற்றர் பதிவை மேற்கோள் காட்டி இட்ட அவரது பதிவில்,
Infrastructure development is vital for any sport but this shouldn’t have been a priority at a time like this. @MahelaJay has a valid point & should be given serious thought. The authorities must always involve all stakeholders & get their opinion before taking the final decision twitter.com/mahelajay/stat …
95 people are talking about this
“எந்த விளையாட்டுக்கும் உட்கட்டமைப்பு வசதி மிக முக்கியமானது, ஆனால் இது போன்ற நேரத்தில் அது முன்னுரிமையாக இருக்கக்கூடாது. மஹேல ஜயவர்தனவின் கருத்தில் நியாயம் உள்ளது. அது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டும். உரிய அதிகாரிகள் எப்போதும், இறுதி முடிவை எடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுடனும் கருத்துகளைப் பெற வேண்டும் ”
இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவின் சகோதரரான கடற்படை அதிகாரி யோஷித ராஜபக்ஷவும் தனது ட்விற்றர் கணக்கில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
“இலங்கை கிரிக்கெட் ஆனது எங்கள் பெருமை மற்றும் சந்தோசம். ஆனால் உலகத்தை சிதைத்துள்ள, தற்போது நிலவும் சுகாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புதிய கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பது போன்ற பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் காலத்தின் தேவை அல்ல என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்"
"இந்த திட்டங்களை பின்னர் மேற்கொள்ள முடியும், போதுமான நிதி இருந்தால், இலங்கை கிரிக்கெட் நிறுவனமானது, திறமைகளை கொண்டவர்களை அடையாளம் காணும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகள் குறைந்த பகுதிகளில் பல்வேறு திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் விளையாட்டை மேலும் மேம்படுத்துவதை எஸ்.எல்.சி கவனிக்க வேண்டும். தற்காலிக முடிவுகள் எடுக்கப்படக்கூடாது.” யோஷிதா ராஜபக்ஷ ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பில் காரணம் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இது முற்று முழுதாக தனியார் முதலீடு எனவும் இதில் அரசாங்கத்தின் எவ்வித நிதியும் செலவிடப்படாது எனத் தெரிவித்திருந்ததோடு, இவ்வாறு அமைக்கப்படும் கிரிக்கெட் மைதானம் கொழும்பு மாவட்டத்திலுள்ள 2ஆவது பகலிரவு மைதானமாக அமையும் எனவும் தெரிவித்திருந்தது.
இதேவேளை, கிரிகெட் நிறுவனத்தின் விளக்கம் தொடர்பில் இன்று (19) மற்றுமொரு பதிவை இட்டுள்ள மஹேல ஜயவர்தன, மீண்டும் விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.
Having looked at the SLC explanation let me give my none political opinion. 1 . We have hosted a t-20 WC and co-hosted 50 over Wc with the existing venues. first bid for the WC and if you get it then with the financial assistance from the 2.You@ICC twitter.com/azzamameen/sta …
192 people are talking about this
"இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விளக்கத்தைப் பார்த்த பிறகு, ஏன் மற்றொரு கிரிக்கெட் மைதானம் தேவை என்பது தொடர்பில், அரசியலின்றிய எனது கருத்து.
1. நாங்கள் ஒரு ரி20 உலகக் கோப்பையை நடாத்தியுள்ளோம். தற்போதுள்ள மைதானங்களைக் கொண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை இணைந்து நடாத்திள்ளோம்.
2. உலகக் கோப்பையை நடாத்துவதற்கான வாயப்பை பெறுங்கள். அவ்வாறு நீங்கள் பெற்றால், ஐ.சி.சி.யின் நிதி உதவியுடன் நீங்கள் உட்கட்டமைப்பை உருவாக்கலாம்
3. எதிர்வரும் 10-15 ஆண்டுகளுக்குள் உலகக் கோப்பையை நடாத்த முடியும் என்ற நோக்கில் அல்ல நீங்கள் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு அரங்கத்தை உருவாக்கவில்லை.”
இந்நிலையில், இலங்கையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக எவ்வித கடன்களையும் ஒதுக்கவில்லையென, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ICC யின் ஊடக மற்றும் தொடர்பாடல் முகாமையாளர் ராஜ்சேகர் ராவோ ஊடக நிறுவனமொன்றிற்கு பதிலளிக்கையில், இது தொடர்பிலான எவ்வித உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment