சமூக ஒற்றுமையுடன் தேசிய ஐக்கியத்திற்கு முன்னுரிமையளிப்போம் - பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜெமீல் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

சமூக ஒற்றுமையுடன் தேசிய ஐக்கியத்திற்கு முன்னுரிமையளிப்போம் - பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜெமீல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதம் மேலோங்கியிருக்கின்ற இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எமது புனித மார்க்கமான இஸ்லாம் காட்டிய வழியில் முஸ்லிம்கள் அனைவரும் சமூக ஒற்றுமையுடன் தேசிய ஐக்கியத்திற்கு முன்னுரிமையளித்து செயற்படுவோம் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் அறைகூவல் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது முஸ்லிம்கள் மீதான இனவாத நெருக்குவாரங்கள் காலத்திற்குக் காலம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இப்போது அந்த இனவாதம் உச்ச நிலையில் தலைவிரித்தாடுவதானது இந்நாட்டு முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது. இன்றைய கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையிலும் கூட முஸ்லிம் சமூகத்தின் மீதான பேரினவாத அடக்குமுறை தொடரவே செய்கிறது.

ஆனால், எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் நிதானத்தை இழந்து செயற்பட முடியாது. சமூகத்திற்கான பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எமது சன்மார்க்கம் காட்டிய வழியில் பொறுமை, சகிப்புத்தன்மையுடன் முற்போக்கான செயற்பாடுகளையே முன்னெடுக்க வேண்டியுள்ளது.

வல்ல இறைவன் மாத்திரமே எமது பாதுகாவலன் என்கிற நம்பிக்கையில் இருந்து நாம் ஒருபோதும் தளர்ந்து விடக்கூடாது.

புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறையச்சம் பெற்றுள்ள நாம் இந்த நம்பிக்கையுடன் சமூக ஒற்றுமையைப் பேணி, மாற்று சமூகத்தினருடன் ஐக்கியமாக வாழ்ந்து எமது தாய் நாட்டுக்கு உழைக்கின்ற சமூகமாக எம்மை அடையாளப்படுத்துவதற்கு இப்புனிதத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம்.

இன்று உலகைப் புரட்டிப் போட்டிருக்கின்ற கொவிட்-19 எனும் கொடிய நோயிலிருந்து முழு மனித சமூகத்தினரையும் பாதுகாக்குமாறு இன்றைய ஈதுல் பித்ர் பெருநாள் தினத்தில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.

No comments:

Post a Comment

Post Bottom Ad