(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவருக்கும் தங்களின் தெரிவு வாக்குகளை அளித்து நமது முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பெற வேண்டும் என அம்பாரை மாவட்ட வேட்பாளர்கள் ஒன்று கூடல் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற போது உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்
மேலும் அவர் உரையாற்றுகையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஒரு சிலர் தங்களின் சுயநலனுக்காக வேட்பாளர் ஒருவருக்கு மாத்திரம் தெரிவு வாக்கினை அளிக்குமாறும் மிகுதி இரண்டு தெரிவு வாக்குகளையும் வெற்றிடமாக விடுமாறும் தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். நமது முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றியை தடுப்பதுடன் ஏனையவர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறவும் வாய்ப்புகள் ஏற்படும். எனவே இச்செயற்பாட்டுக்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
கடந்த 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் சுமார் 33 ஆயிரம் வாக்குகளை ஐ.தே.கட்சியின் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவார்கள் என நம்பி யானை சின்னத்துக்கு வாக்களித்தார்கள். தேர்தல் முடிவு அம்பாரையிலௌ இருந்து மாத்திரம் மூன்று பெறும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களான பீ.தயாரத்ன, கலபதி, பக்மீம ஆகியோர் வெற்றியடைந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர் என்ற வரலாற்றையும் கடந்த 2010 நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்கலுள் தனித் தனித் தெரிவு வாக்குகளை அளித்ததெனால் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கலும் தோல்வி அடைந்த வரலாற்றையும் நாம் எம் கண் முன்னே கன்டிருக்கின்றோம்.
அண்மையில் அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரும், மரைக்காயர் சபை உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பும் போதும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நமக்கான மூன்று தெரிவு வாக்குககளையும் மூன்று வேட்பாளர்களுக்கு அளிப்பதன் ஊடாகவே நமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதனை தெளிவு படுத்தியுள்ளதோடு இது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களிடமும் தெரிவித்திருக்கின்றேன்.
எனவே, எமது வேட்பாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு நமக்கான பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment