தமிழீழ சைபர் படையணி (Tamil Eelam Cyber Force) எனும் குழுவினரால் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு www.pubad.gov.lk மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் www.slbfe.lk ஆகிய அரசாங்க இணையத்தளங்கள் மீது நேற்றையதினம் (30) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தரவுகள் திருடப்படவில்லை என, இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு | ஒருங்கிணைப்பு மையம் (Srilanka CERT | CC) தெரிவித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஒரு சில அரச இணையத்தளங்கள், செயற்பாட்டாளர்கள் குழுவினால் (activist) மாற்றம் செய்யப்படுத்தப்பட்டதை (defaced) இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு | ஒருங்கிணைப்பு மையம் (Srilanka CERT | CC) உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வகையான செயற்பாட்டாளர்களின் இறுதி இலக்கு, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதும், வெறுப்பான செய்திகளை பரப்புவதுமாகும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு | ஒருங்கிணைப்பு மையத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் தெரிவித்தார்.
"இத்தகைய செயற்பட்டாளர்களை தேவையற்ற வகையில் பிரபலமாக்காமல் இருப்பது மிக முக்கியமாக அமைகின்றது. கடந்த காலங்களிலும் இதேபோன்ற பல இணையத்தள தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இவ்வாறான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையமானது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், செயலணியொன்றையும், செயற்குழுவொன்றையும் நிறுவியுள்ளது.
இச்செயற்குழுவில் இணைய சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட முக்கிய அரச மற்றும் தனியார் துறை பங்காளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு | ஒருங்கிணைப்பு மையம் ஆனது, பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் செயற்பட்டு வரும், இலங்கையின் தகவல் மற்றும் தகவல் அமைப்புகளின் உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதே இந்த அமைப்பின் முக்கிய பணியாகும்.
இவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இணையத்தள செயலிழப்பானது, இணையப்பக்கத்தின் தோற்றத்தை அல்லது இணையத்தளம் தோன்றும் விதத்தை மாற்றுவதன் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், இணையத்தளங்களை இழிவுபடுத்தும் இம்முயற்சியில் தரவு மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"தாக்குதல்தாரர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்மாற்றத்தை அடையாளம் கண்டு, உரிய வகையில் நடவடிக்கை எடுக்க செயலணியினரால் முடிந்துள்ளது. இந்த இணையத்தள தாக்குதல்கள் காலை 6.38 மணிக்கு ஏற்பட்ட நிலையில், காலை 7.30 மணியளவில் இலங்கை கணனி அவசர தயார்நிலை குழுவின், தகவல் பாதுகாப்பு பொறியாளர்களால் இணையத்தளங்களை மீண்டும் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment