மக்களுக்கு கிடைத்த ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை எதிர்த்தரப்பினரே இல்லாமலாக்கியுள்ளனர் - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, May 25, 2020

மக்களுக்கு கிடைத்த ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை எதிர்த்தரப்பினரே இல்லாமலாக்கியுள்ளனர் - தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா) 

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றின் காரணமாகவே மக்களுக்கு கிடைக்கப் பெற்ற நிவாரணம் தற்போது இல்லாமலாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

தேர்தலை நோக்காகக் கொண்டு 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது என்று எதிர்தரப்பினரால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் காரணமாகவே இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் தீர்மானமொன்றை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்கிய போது தேர்தல் நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது என்று குற்றம் சுமத்தினார்கள். ஆனால் அந்த கொடுப்பனவு வறுமையான மக்களுக்கே வழங்கப்பட்டது. அதில் எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது. 

எதிர்த்தரப்பினரால் தொடர்ச்சியாக இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்ததால் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றின் காரணமாகவே மக்களுக்கு கிடைக்கப் பெற்ற நிவாரணம் தற்போது இல்லாமலாக்கப்பட்டுள்ளது. 

வேண்டிய சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவதற்கான சூழல் காணப்படுவதாக தாம் அவதானிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எனவே விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கும் என்று நம்புகின்றோம். 

பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையினர் பலமானதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment