பட்டதாரிகளுக்கு தொழில்களை தேடிக்கொள்ளக் கூடிய வகையில் உயர் கல்வித் துறையை மறுசீரமையுங்கள் - பல்கலைக்கழக அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 15, 2020

பட்டதாரிகளுக்கு தொழில்களை தேடிக்கொள்ளக் கூடிய வகையில் உயர் கல்வித் துறையை மறுசீரமையுங்கள் - பல்கலைக்கழக அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக கல்வி பற்றி எத்தகைய வியாக்கியானங்கள் இருந்த போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிலொன்றை தேடிக்கொள்ள முடியாதாயின் அது சரியான கல்வி முறையாக இருக்க முடியாது. பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக தொழில்கள் அவர்களை தேடி வரும் கல்வி முறைமையே தேவையாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் இன்று (15) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக் கல்வி முறைமையை மேலும் மேம்படுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார். எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தில் 30 வீதத்தினரையாவது ஒன்லைன் அதாவது இணைய வழிக் கல்விக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் கல்வி கற்றுவந்த ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களை கொவிட் நோய்த்தொற்று பரவலுடன் நாட்டுக்கு அழைத்து வர வேண்டியிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இவ்வளவு அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்ல அறிகுறியல்ல என்றும் குறிப்பிட்டார். ' இவர்களது கல்விக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு செல்கின்றது. பிள்ளைகள் தம்மை விட்டும் தூரமாகியிருப்பது பெற்றோருக்கு அழுத்தத்தை தருவதாக உள்ளது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பல்கலைக்கழக கல்வி பல்வகைப்படுத்தப்பட வேண்டும். தொடர்பாடல் தொழிநுட்பம் உள்ளிட்ட புதிய தொழிநுட்ப அறிவு, தாதி தொழில், சுற்றுலா, ஆசிரியர் தொழில் போன்ற துறைகளில் பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்' என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு குறைந்த செலவில் புதிய கணினிப் பாகங்களை ஒன்றிணைக்கும் இயலுமை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழக பொறியியல் பீடம் உள்ளிட்ட இதுபோன்ற பாட அறிவுடன் கூடியவர்களுக்கு இதற்கு உதவ முடியும். எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கணினியொன்றை பெற்றுக்கொள்ளும் வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும். உயர் தர பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் தகைமை பெறும் அனைவருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய முன்னர் வீடுகளில் இருந்து ஆங்கிலம் மற்றும் கணினிக் கல்வியை வழங்க திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கப்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் வினவியதற்கு பதிலளித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இம்முறை மாணவர் அனுமதி 7500 பேரினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக ஆகியோர் உட்பட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment