நாளை (26) முதல் சமூக இடைவெளியை பேணாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பேணாதவர்கள் மாத்திரமன்றி அதன் உரிமையாளர்கள், முகாமையாளர்கள் ஆகியோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் உடற்பயிற்சி நிலையங்கள், உடல் பிடித்துவிடுதல் நிலையங்கள், திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எமது நாட்டில் கொவிட்-19 நோய் பரவியதைத் தொடர்ந்து முதலாவது நோயாளி கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். அதனையடுத்து மார்ச் 18ஆம் திகதி கொச்சிக்கடை பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 19ஆம் திகதி இன்னும் சில இடங்களிலும் மார்ச் 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இரு மாதங்களுக்கு பிறகு நாளை (26) முதல் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவதோடு, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் ஊரடங்குச் சட்டம், இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
இரவு நேரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் வேளையில் அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக பயணிக்கும்போது ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் அத்தியாவசியமாகும் என அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 65,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 18,000 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளளதாகவும், சுமார் 20 ஆயிரம் பேருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 7,000 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஏனையோருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள், நாட்டு மக்களின் நலன் கருதியே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், நோயை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் நமது நாட்டின் மரண வீதமானது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரின் தியாகத்தின் மூலமே இதனை மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலைமையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய அவசியமுள்ளதாக தெரிவித்த அவர், உலகில் கொரோனா வைரஸ் பரவல் நிலை இன்னும் நீங்கவில்லை. இலங்கையிலும் இந்நிலைமை காணப்படுவதால் மீண்டும் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்படாதிருப்பதற்காக பொதுமக்களின் உதவியுடன் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நாட்டின், ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான பிரதேசங்கள், விமான நிலையம், துறைமுகங்கள் உள்ளிட்ட நாட்டின் பொருளாதார விடயங்கள் தொடர்பான பெரும்பாலான இடங்களும் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவுள்ளது.
இவ்வேளையில் நீங்கள் நிறுவனங்களில், அலுவலகங்களில் அல்லது வேறு பணிகளில் ஈடுபடாத நிலையில் தேவையற்ற வகையில் வெளியில் செல்லாதிருக்குமாறு தெரிவித்த அவர், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லுமாறும் தெரிவித்தார். சாதாரண நாட்களில் வெளியில் செல்வது போன்று இன்னும் அனுமதியும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக சமூக இடைவெளியை எப்போதும் பேணுவது மிக முக்கியமான விடயமாகும் என தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, எப்போதும் சமூக இடைவெளியை பேணுகின்ற விடயத்தை ஏனைய விடயங்களிலும் பார்க்க மிகவும் முன்னுரிமை வழங்கி கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜாசிங்கவினால் இது தொடர்பில் உத்தரவொன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சமூக இடைவெளியை பேணாதவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டம் அதன் விதிமுறைகளுக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய பொலிஸ்மா அதிபருக்கு இது தொடர்பான உத்தரவொன்றை அவர் வழங்கியுள்ளார்.
பொலிஸ்மா அதிபரினால் இது தொடர்பில் சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளதோடு, அது நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், நாளை முதல் சமூக இடைவெளியை பேணாதவர்களை, கைது செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி முழு இலங்கையும் நோய் பரவக்கூடிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய சமூக இடைவெளியை பேணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான உத்தரவை மீறி நடப்பவர்களுக்கு எதிராக நாட்டின் குற்றவியல் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
இதனை மீறுபவர்களுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுவரை ஊரடங்கை மீறிய, ஊரடங்கு சட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்கள் மாத்திரம் கைது செய்யப்பட்டு வந்ததாகவும் நாளை (26) முதல் சமூக இடைவெளியை பேணாதவர்களையும் கைது செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஒரு சில விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட குறிப்பாக மதுபான விற்பனை நிலையங்களில் சமூக இடைவெளியை பேணுவதில் வாடிக்கையாளர்கள், அசிரத்தையாக நடந்து கொள்வதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக தெரிவித்த அவர், அவ்வாறானோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, அவ்வாறான விற்பனை நிலையங்கள் மீதும் அதன் முகாமையாளர்கள், உரிமையாளர்கள் மீதும் நாளை முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment