அரசியலமைப்பு ரீதியாக பலம் பொருந்திய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பதிலாக 225 முன்னாள் எம்.பி.க்களையும் பிரதமரின் இல்லத்திற்கு அழைத்து மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் பலனளிக்கும் என தாம் கருதவில்லை என, அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் ஆராய எதிர்வரும் திங்கட்கிழமை (04) அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அலரி மாளிகைக்கு வருமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பு தொடர்பில் பதில் வழங்கியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு கடிதமொன்றை எழுதியுள்ள அவர், அதன்பிரதியை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் எழுதியுள்ள குறித்த கடிதம் வருமாறு,
பிரதமர்,
பிரதமர் அலுவலகம்,
கொழும்பு 02.
மாண்புமிகு பிரதமர்,
பிரதமரால் அழைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தொடர்பானது
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று, பிரதமர் தலைமையில் 2020 மே 04 மு.ப. 10.00 மணிக்கு, அலரி மாளிகையில் இடம்பெறுவதால், அதில் பங்கேற்கும்படி என்னையும் எமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில், படிக்க கிடைத்தது.
கொரோனா பேரழிவைத் தோற்கடிப்பதற்கும் அது தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், ஒரு கட்சி எனும் வகையில், நாங்கள் எப்போதும் எமது தலையீடு மற்றும் ஆதரவை வழங்கி வந்துள்ளோம். தொடர்ந்தும் அதனை மேற்கொள்வோம்.
கொரோனா வைரஸை தோற்கடிக்கவும், தற்போதைய நிலைவுகின்ற நிலைமை தொடர்பில் கருத்துக்களை கேட்டறிவதற்கும் அரசியலமைப்பு ரீதியாக பலம் பொருந்திய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பதிலாக முன்னாள் எம்.பி.க்கள் 225 பேரையும் பிரதமரின் இல்லத்திற்கு அழைத்து மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் பலனளிக்கும் விடயமாக நாம் கருதவில்லை. குறிப்பாக இந்த பேரழிவைச் சமாளிக்க ஒரு பொதுவான பொறிமுறையை உருவாக்குமாறு எமது கட்சி உள்ளிட்ட பெரும்பாலானோர் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும், இதுவரை அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இவ்வாறு அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைப்பது பலனளிக்காது என்பது எமது கருத்தாகும்.
மறுபுறம், கொரோனா பேரழிவைச் சமாளிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மிகச் சிறந்த விடயம் யாதெனில், கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையின் கீழ் அழைத்து, உரிய நடவடிக்கைக்கு அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என நாம் கருதுகின்றோம். இதற்கு முன்னர் பிரதமராக உங்கள் தலைமையில் கூட்டப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எங்கள் கட்சி பங்கேற்றது எனவும், அதில் எமது கட்சியின் கருத்துகள் மற்றும் யோசனைகளை நாம் முன்வைத்தோம் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மறுபுறம், ஏப்ரல் 30 இற்குப் பிறகு அரச நிதியை செலவிடுவதற்கான அதிகாரம் இல்லை என்ற கருத்தும், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்படாத நிலை காரணமாக ஏற்படும் அரசியலமைப்பு சிக்கல் குறித்தும் சமூகத்தில் தற்போது கருத்துகள் எழுந்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் இவ்விடயம் குறித்து அலரி மாளிகைக்கு வரவழைத்து கலந்துரையாடப்படுமாயின் அவ்வாறான கலந்துரையாடலில் அரசியலமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வாய்ப்பில்லை.
எனவே, மேற்கண்ட பிரச்சினைக்கு இந்த கூட்டம் அழைக்கப்பட்டால், அது தொடர்பான சரியான நடவடிக்கையானது,
01. அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதியினால் பாராளுமன்றம் மீள கூட்டப்பட வேண்டும் அவ்வாறில்லையாயின்,
02. இந்த சூழ்நிலையில் எடுக்கக்கூடிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டறிதல் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அவ்வாறின்றி, அரசியலமைப்பின் படி செயல்படாததன் மூலம் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது பயனற்றது என்று நாங்கள் நம்புகிறோம் என்பதால், மே 04ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள கூட்டத்தில் நான் உள்ளிட்ட எமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றமாட்டார்கள் என இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம்.
இப்படிக்கு,
உண்மையுள்ள
அநுர குமார திஸாநாயக்க (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
கட்சித் தலைவர் - மக்கள் விடுதலை முன்னணி
2020.05.01
பிரதிகள்: அனைத்து ஊடகங்களுக்கும்
No comments:
Post a Comment