இருளைப் பார்த்து பயப்பட வேண்டாம் - தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் : ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 31, 2020

இருளைப் பார்த்து பயப்பட வேண்டாம் - தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் : ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நோர்வூட் மைதானத்தில் இன்று நடைபெற்ற தந்தையின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்று நன்றியுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பிரச்சினையால் தகுதியான முறையில் இறுதி அஞ்சலியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இவ்விடயம் கவலையளித்தாலும் நாட்டின் நலனும், பாதுகாப்பும் எமக்கு முக்கியம். அப்பா இருந்திருந்தால் அவரும் இதனையே ஆசைப்பட்டிருப்பார்.

எனவே, கொரோனா பிரச்சினை எல்லாம் முடிவடைந்ததும் நீங்கள் எல்லாம் எதிர்ப்பார்க்கும் வகையில் ஒரு மாபெரும் நிகழ்வு கட்டாயம் நடத்தப்படும்.

மலையக அபிவிருத்தி சம்பந்தமாக எனது தந்தை கனவுகள் கண்டார். அந்த கனவுகளை நிறைவேற்ற எதிர்பார்த்திருக்கின்றோம்.

குறிப்பாக கல்விக்கு முன்னுரிமை வழங்கினார். மலையக பல்கலைக்கழகம் சம்பந்தமாக உயர்கல்வி அமைச்சருடன் பேச்சு நடத்தியிருந்தோம். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக அது நிச்சயம் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

எமது சமூகம் ‘கெத்தாக’ வாழும் வகையில் வீடமைப்பு திட்டம் உருவாக்கப்படும். அப்பா மரணித்த நாளன்றுகூட ஆயிரம் ரூபா பற்றிதான் கதைக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் சந்தோசமாகவே வீடு திரும்பினோம். வீட்டில் நானும், தந்தையும் சிரித்து பேசிக்கொண்டிருந்தோம்.

ஜீவன் என்றதும் திரும்பி பார்த்தேன், பெருமூச்சுவிட்டார். அவரை சென்று தாங்கிப் பிடித்தேன். அவர் கண்களில் முதற்தடவையாக ‘என் மக்களை விட்டு போகின்றேன்’ என்ற பயம் தெரிந்தது.

நானும், அக்காவும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தோம். இரண்டொரு நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. 26 வயதில் என் தந்தையை பிரிவேன் என தெரிந்திருந்தால் நான் தூங்கியிருக்கவே மாட்டேன். 

எனக்கு செந்தமிழ் பேசவராது. இது பற்றி அப்பாவிடம் சொன்னேன். குடும்ப உறுப்பினருடன் பேசுவதுபோல் மக்களிடம் பேசு, ஏற்றுக் கொள்வார்கள் என்றார். இன்னும் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தது. அதற்குள் போய்விட்டார்.

எனது அனுபவம் பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். தந்தையிடம் கேட்டேன். முதுகில் குத்துவதற்குத்தான் அனுபவம் தேவை, சேவை செய்ய நல்ல மனம் இருந்தால் போதும் என்றார்.

அந்த நம்பிக்கையில்தான் இவரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டியது என் பொறுப்பு என ஜீவன் தொண்டமான் ஆகிய நான் உறுதியளிக்கின்றேன்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிந்துவிட்டது என சிலர் நினைக்கின்றனர். இருளை பார்த்து பயப்பட வேண்டாம். ஏனெனில் காலையில் சூரியன் உதிக்கும். சேவல் கட்டாயம் கூவும் என்றார்.

No comments:

Post a Comment