மக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி கோத்தாபாய - News View

About Us

About Us

Breaking

Sunday, May 31, 2020

மக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகனின் இழப்பு மலையக சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் : இரங்கல் செய்தியில் ஜனாதிபதி கோத்தாபாய

(ஆர்.யசி)

ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நேர்மையான அரசியல் மற்றும் மதிநுட்பத்தின் இழப்பு மலையக சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். மக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொள்ளாத போதிலும் ஜனாதிபதியின் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.

அதில் ஜனாதிபதி குறிப்பிடப்பட்டுள்ளதானது, நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் சமூக வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் அகால மரணம் பற்றி அறிந்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

தனக்கு முன்னோடியாக இருந்த தனது பாட்டனாரும் சிரேஷ்ட தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் மகத்தான பணியினை முன்னெடுத்து சென்ற ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மலையக தமிழ் சமூகத்தின் மனக்குறைகளை தீர்த்து வைப்பதில் தைரியமான செயற்பட்டவர்.

தமிழ் சமூகம் முகங்கொடுத்த பிரச்சினைகளை சரியாக அறிந்திருந்த தொண்டமான் அவர்கள் அதற்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்.

அக்காலகட்டத்தில் செயற்பட்டு வந்த பலமான பயங்கரவாத அமைப்பினால் விடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்திற்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார்.

நலிவடைந்த தொழிலாளர்களாக கருதப்பட்ட பெருந்தோட்ட சமுகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான தனது பாட்டனாரின் முயற்சியை அவர் தொடர்ந்தும் முன்னெடுத்தார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக இன்று தோட்ட சமூகத்தினர் உயரிய வாழ்க்கைத்தரத்தை அடைந்துள்ளனர்.

மலையக மக்களின் சமூக உரிமைகளை வெல்வதே தனது கடமையாக கொண்டிருந்தார். ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நேர்மையான அரசியல் மற்றும் மதிநுட்பத்தின் இழப்பு சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். 

மக்கள் நேய அரசியல்வாதியான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் என ஜனாதிபதி தனது இரங்கல் உரையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment