தேர்தலை வெற்றி கொள்ளும் நோக்கில் அரசாங்கம் உண்மைகளை மறைக்க முயற்சி : நாட்டை மயானமாக்க இடமளிக்க வேண்டாம் என்கிறார் சம்பிக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, May 3, 2020

தேர்தலை வெற்றி கொள்ளும் நோக்கில் அரசாங்கம் உண்மைகளை மறைக்க முயற்சி : நாட்டை மயானமாக்க இடமளிக்க வேண்டாம் என்கிறார் சம்பிக்க

(செ.தேன்மொழி) 

அரசாங்கம் தேர்தலை வெற்றி கொள்ளும் நோக்கத்தில் உண்மைத் தகல்களை மறைப்பதற்காக முயற்சிப்பதுடன், சுகாதார பிரிவினரின் செயற்பாடுகளை இரணுவத்தினரை கொண்டு நிறைவேற்றியதன் விளைவுகளே இராணுவத்தினர் பலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை அவசரமாக தேர்தலை நடத்துவதற்கு முயற்சித்து நாட்டை மயானமாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொவிட் -19 வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் முறையான செயற்பாடுகள் எதனையுமே மேற்கொள்ளவில்லை. வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்திருந்த போதும், வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. 

பெப்ரவரியின் இறுதிப் பகுதியில் அல்லது மார்ச் முதலாம் திகதிக்கு முன்னால் நாட்டை மூடியிருந்தால் ஒருவர் கூட நோய் தொற்றுக்குள்ளாகியிருக்க மாட்டார்கள். ஒருவர் கூட நோய்த் தொற்றுக்குள்ளாகாத 17 நாடுகள் காணப்படுகின்றன. எமது நாட்டையும் இவ்வாறு பாதுகாக்க முடிந்திருக்கும். ஒரு தீவு என்ற வகையில் அந்த செயற்பாடுகளை முறையாக மேற்கொள்ள முடிந்திருக்கும். விமான நிலையங்களை மாத்திரமே நாம் மூட வேண்டியிருந்தது. அதனையும் செய்யவில்லை. 

கொரேனா நெருக்கடியின் மத்தியில் தேர்தலைப் பற்றியும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பற்றியும் கனவுகண்டு கொண்டிருந்தனர். பொதுவாக 48 நாட்கள் தொடர்ச்சியாக நாட்டை முடக்கி வைத்திருந்தால் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டமும் 54 நாட்கள் முடக்கப்பட்டுள்ள போதிலும் வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. 

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலத்திலே கொரோனா பரவல் அதிகரித்து வந்துள்ளமை அவதானிக்க முடிகின்றது. அப்படியென்றால் ஊரடங்கு அமுலில் இருந்த காலப்பகுதியில் ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கை தளர்த்த முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஊரடங்கை தளர்த்தலாம், வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. போன்ற காரணங்களை முன்வைத்து தளர்த்த முயற்சித்தனர். இதன்போது சுகாதார அமைச்சரும், வைரஸ் பரவலை தடுப்பதற்கான செயலணியின் தலைவரும் செயற்பட்ட விதம் வைரஸ் தொற்று தொடர்பில் இனி அச்சம் கொள்ளத் தேவையில்லை போன்று தோன்றியது. 

ஆனால் தற்போது என்ன நடந்துள்ளது. வைரஸினால் நெருக்கடி நிலைமை மேலும் அதிகரித்துள்ளது. இதன்போது மே மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக முன்னெடுத்த முயற்சிகள் செயற்படுத்த முடியாமல் போயிருந்தன. தற்போது ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கே முயற்சிக்கின்றனர். அதற்கமையவே மே மாதம் 11 ஆம் திகதி ஊரடங்கை தளர்த்த முடியும் என்று தெரிவித்துள்ளனர். மீண்டும் நெருக்கடி நிலைமையை அதிகரிப்பதற்காகவா அரசாங்கம் இவ்வாறான முயற்சியை மேற்கொள்ளவுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. முறையற்ற விதத்திலே அனைத்து செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் பெருந்தொகையானோர் மருத்துவ பிரிவினைச் சேர்ந்தவர்களே இருக்கின்றனர். எமது நாட்டை பொறுத்தமட்டில் இராணுவத்தினரே அதிகளவில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். காரணம் மருத்துவ துறையினரின் செயற்பாடுகளை இராணுவத்தினர் மூலம் நிறைவேற்றியுள்ளனர். 

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் டெங்கு பரவல் அதிகரித்திருந்த போது இராணுவத்தினர் வைத்தியசாலைகளை அமைக்க, டெங்கு பரவலை தடுக்கவே முயற்சித்து வந்தனர் ஆனால் எவருமே வைத்திய செயற்பாடுகளில் ஈடுப்படுத்தப்படவில்லை. இங்கு அவ்வாறான செயற்பாடு இடம்பெற்றதன் காரணமாகவே இன்று பெரும் தொகையான இராணுவத்தினர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதற்கான முழு பொறுப்பையும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் சுகாதார அமைச்சரும், மருத்துவ பிரிவினருமே ஏற்றுக் கொள்ள வேண்டும். 

இதேவேளை நாட்டில் உயிரிழந்துள்ள எத்தனை பேரின் கொரோனா தொற்று தொடர்பில் பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு இடம்பெறும் பரிசோதனைகள் தொடர்பில் உண்மைத் தகவல்கள் வெளியிடப்படுகின்றதா? பரிசோதனைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் ஏன் அதிகரிப்பதில்லை. அதிகரித்தால் நோயாளர்களும் அதிகளவில் கண்டறியப்படுவர். இந்நிலையில் பிரபுக்கள் பிரிவைச் சேர்ந்த எத்தனைப் பேர் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். சாதாரண மக்கள் எத்தனை பேர் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர் என்பது தொடர்பில் சுகாதார பிரிவு உண்மையான தகவல்களை தெரியப்படுத்த வேண்டும். 

இந்த நடுத்தர சிறிய நாடு, மற்றும் ஜனநாயம் நாடு என்பதினால் இதனை எவ்வாறு மறைக்க முயற்சித்தாலும், இதில் உண்மைத்தன்மை வெளியில் வரும். வைரஸின் பாதிப்புக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமில்லை. இங்குள்ள காலநிலை மற்றும், தொற்று நோய்ப்பரவல்கள் காரணமாக அதனை தடுப்பதற்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. அதன் காரணமாகவே வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகள் கட்டுப்பட்டுள்ளது. 

இதேவேளை நல்லாட்சி அரசாங்கம் சுகாதார சேவையை முன்னெற்றுவதற்கு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இலவச கல்வி சிறந்த முறையில் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நாட்டில் 25 ஆயிரம் வைத்தியர்கள் சேவையில் ஈடுபட்டு வருவதுடன் 90 ஆயிரம் கட்டில்கள் காணப்படுகின்றன. இவ்வாறு வசதிகளை சுகாதார பிரிவுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததன் விளைவே இதனை உரியமுறையில் முகாமைத்துவம் செய்யமுடிகின்றது. 

இதனை விடுத்து அரசாங்கம் எந்தவித சாதனையும் செய்து முகாமைத்துவம் செய்யவில்லை. இந்நிலையில் அவசரமாக தேர்தலை நடத்தி நாட்டை மயானமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் தேர்தல்கள் ஆணையகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

No comments:

Post a Comment