(ஆர்.யசி)
நாட்டின் நிலைமை மற்றும் தமது ஆதங்கங்களை நாட்டில் பல பகுதிகளில் இருந்து சிறுவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இணைய காணொளி மூலமாக தெரிவித்தனர். அவர்களின் கேள்விகள் அனைத்திற்கும் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் பிரதமர் பதில் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களின் பிள்ளைகள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் வீடுகளில் கற்கைகளை முன்னெடுக்கும் மாணவர்கள் என பலர் தமது கேள்விகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இணைய காணொளிகள் மூலமாக தெரிவித்தனர்.
மாணவர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதில் தெரிவித்தார். இதில் அவர் சிங்கள, தமிழ், ஆங்கிலம் மொழிகளில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தை எப்போது வீடு திரும்புவார். எமது கல்வியை தொடர எப்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். இம்முறை வெசாக் தினத்தில் நாம் வெசாக் அலங்காரக் கூடுகளை தயாரிக்க அனுமதி வழங்குவீர்களா? நாட்டின் சுகாதார நிலைமைகள் எவ்வாறு உள்ளது என்ற பல கேள்விகளை மாணவர்கள் பிரதமரிடம் கேட்டனர்.
இதற்கெல்லாம் பதில் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜாபக்ஷ, ஜனாதிபதி தாத்தாவும் நாமும் எமது மழலை செல்வங்களின் கருத்துக்களை செவிமடுகின்றோம். நாட்டின் நிலைமைகளை வெகுவிரைவில் சரி செய்து நீங்கள் அனைவரும் உங்கள் தாத்தா, பாட்டி, நண்பர்கள், ஏனைய உறவினர்களை சந்திக்க அவர்களுடன் வீடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பினை உருவாக்கிக் கொடுப்போம்.
கொழும்பில் சிக்கியுள்ள உங்களின் தந்தை வெகு சீக்கிரம் வீடு திரும்புவார். உங்களினதும் நாட்டினதும் நன்மையை கருதியே உங்களின் தந்தை கொழும்பில் உள்ளார். அவரை வெகு சீக்கிரம் உங்களுடன் கொண்டு சேர்ப்போம். அதற்காகவே ஜனாதிபதி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
அத்துடன் நீங்கள் வெசாக் கூடுகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். வீட்டில் இருந்து வெசாக் கூடுகளை உருவாக்கி வீட்டை சுற்றி தொங்க விடுங்கள்.
மகளே.! உங்களின் ஆதங்கங்கள் எமக்கு நன்றாக தெரிகின்றது. ஆனால் உங்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியமானதாக உணரப்படுகின்றது. நீங்கள் வீட்டில் இருந்தே நன்றாக கல்வி கற்றுக் கொண்டிருங்கள். உங்களுக்கான சகல வசதிகளையும் நாம் செய்து தருவோம். புதிய படைப்புகளை உருவாக்கும் பிள்ளைகள் எம்மை சந்தித்து உங்களின் படைப்புகளை எமக்கு காண்பிக்க முடியும்.
சுகாதார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்படுகின்றது. பிள்ளைகள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்பாக வீடுகளில் இருங்கள் என அவர் தன்னுடன் உரையாடிய பிள்ளைகளுக்கு தெரிவிதிருந்தார்.
No comments:
Post a Comment