சுகாதாரத்துறை, கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

சுகாதாரத்துறை, கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல்

(எம்.மனோசித்ரா) 

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் நாளை மறுதினம் 26 ஆம் திகதி செவ்வாய்கிழமை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 

அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இந்த கலந்துரையாடல்களின் போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்து கொடுக்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. 

உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள் மற்றும் திடீரென மாணவர்களுக்கு சுகவீனம் அல்லது உடல் உஷ்னம் அதிகரித்தல் போன்றன ஏற்பட்டால் அந்த மாணவர்களுக்கான முதலுதவியை வழங்குவதற்கான கட்டிலுடன் கூடிய அறை வசதிகள் உள்ளிட்ட மூன்று விடயங்களில் பிரதானமாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருக்கிறது. இவற்றுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. 

சுமார் 200 மாணவர்கள் அல்லது அதற்கு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு இந்த மூன்று வசதிகளையும் ஏற்படுத்துக் கொடுப்பதற்காக 30 ஆயிரம் ரூபா நிதியை ஒதுக்குவதற்கு கணிப்பிடப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைக்காக 10 ஆயிரம் ரூபாய் வரையாகும். 

300 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு இதுபோன்ற இரண்டு கைகழுவும் தொட்டிகளை வழங்கவும். 1000 ஐ விட அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைக்கு 20 கை கழுவும் தொட்டிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதோடு, இவற்றுக்கான செலவாக 680 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானியும் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment