(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு பதிலைக் கோரியிருக்கும் தமிழ் சிவில் சமூக அமையம், இது விடயத்தில் அரசாங்கத்தினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு முழுமையான அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு பொதுச் சுகாதார அபாயக் காலப்பகுதியில் அதனை எதிர்கொள்வது தொடர்பில் பொதுத் தொடர்பாடல் வெளிப்படையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். பேரிடர் காலத்தில் அரசாங்கம் கூறுவதையும், செயற்படுத்துவதையும் மக்கள் வெறுமனே நுகர்ந்து கொண்டிருக்க முடியாது.
ஜனநாயகம் என்பது பொதுவாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். கேள்வி கேட்பது பேரிடர் காலத்தில் சுமையாகக் கருதப்படக் கூடாது. அதனடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
உலகெங்கிலும் ஊரடங்கைத் தளர்த்தும் / முடிவிற்குக் கொண்டுவரும் உபாயம் விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படுகிறது. தொற்று வீதம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பட்சத்தில் ஊரடங்கு தளர்த்தப்படலாம். புதிதாக இனங்காண எதிர்பார்க்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை, அவர்களை பராமரிப்பதற்குரிய பொதுவளங்களோடு ஒப்பிடுகையில் சமாளிக்கத்தக்கதாக அமையும் போதே ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்பது உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படும் முறையாக உள்ளது. அவ்வாறிருக்கையில் எமது நாட்டில் எத்தரவுகளின் அடிப்படையில் ஊரடங்கைத் தளர்த்தும் தீரமானம் மேற்கொள்ளப்படுகிறது?
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. அது அமுல்படுத்தப்பட்டுள்ளதா?
கடந்த மாதம் 19 ஆம் திகதி பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், அது மறுநாள் இடம்பெற்ற தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் கூட்டத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானமா?
கொரோனா வைரஸ் பரவல் உச்சம் பெறுவதைத் தடுக்கும் குறிக்கோளை சாத்தியப்படுத்தியவாறு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முறையான திட்டங்கள் அரசாங்கத்திடம் உள்ளதா?
இராணுவத்தினால் கண்காணிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் பின்பற்றப்படும் நியமங்கள் என்ன?
ஓர் சுகாதார நெருக்கடிக்குத் தலைமை தாங்கிக் கையாளும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்? அதற்கான பயிற்சி அவர்களுக்கு உள்ளதா?
ஊரடங்கால் தற்போது வரை ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு என்ன? அதனை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் திட்டமென்ன?
என்பவை உள்ளிட்ட விரிவான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கேள்விகள், கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசாங்கம் அரசியலை பிரதானப்படுத்துவதையே காண்பிப்பதாகவும், எனவே இதுவரை காலமும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment