தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் உரிமைகளை பாதுகாக்குமாறும் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணியின் தந்தை தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்ட விதம் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் குறித்து கடும் கரிசனைகளை எழுப்பியுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவரது கைதிற்கு முன்னர் இடம்பெற்ற விடயங்கள் ஹிஸ்புல்லாவின் சுதந்திரத்தை பறிப்பதற்கான தெளிவான காரணங்கள் இல்லை என்பதை புலப்படுத்தியுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டத்தரணியின் மனைவி கையொப்பம் இட்ட ஆவணத்தில் என்ன விடயங்கள் இடம்பெற்றிருந்தன என்பதை அதிகாரிகள் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்களை அறிவிக்க தவறியதன் காரணமாக உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ள மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்யும் ஆவணம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
சட்டத்தரணிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ளதாக அறிக்கைகள் விடப்படடுள்ள போதிலும் அவரிற்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் சட்டத்தரணியொருவரை சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது, குடும்பத்தவர்கள் அவரை பார்ப்பதற்கு ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டது பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அனுமதியே வழங்கப்பட்டது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டத்தின் அடிப்படையில் 72 மணித்தியாலங்களிற்குள் கைது செய்யப்பட்டவரை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment