சீன - அமெரிக்க தொலைபேசி அழைப்புகள் குறித்து இலங்கையின் அவதானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

சீன - அமெரிக்க தொலைபேசி அழைப்புகள் குறித்து இலங்கையின் அவதானம்

(லியோ நிரோஷ தர்ஷன்) 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம்மாதம் இரு முக்கிய தொலைபேசி உரையாடல்களில் கலந்துகொண்டிருந்தார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபட் ஓ பிறைன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரது தொலைபேசி அழைப்புகள் இலங்கையில் மாத்திரமல்லாது பிராந்திய அரசியலில் முக்கியத்தும் மிக்கதாக அமைந்துள்ளது. 

இந்த கலந்துரையாடலின் போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபட் ஓ பிறைன் இலங்கைக்கான அமெரிக்காவின் ஆதரவு குறித்து தெளிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தொலைபேசியல் தொடர்புகொண்டார். 

மேலும் அமெரிக்கா - இலங்கைக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்புமானது நீண்ட வரலாற்றைக் கொண்டமைந்தது என்றும் அவர் இதன்போது உறுதிப்படுத்தினார். அத்துடன் இந்த உரையாடலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முயற்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உரையாடியதாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. 

மேலும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இரு தரப்பு உறவு ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய பகுதியாகும் என்பதை ரொபட் ஓ பிறைன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

மறுபுறம் கொவிட் -19 இன் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை உறுதி செய்யும் அதேவேளையில் சீனாவும் இலங்கையும் பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாயவுடன் இடம்பெற்ற உரையாடலின் போது சீன ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன் இரு நாடுகளும் முக்கிய ஒத்துழைப்பு திட்டங்களை ஒழுங்காக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன் புதிய பட்டு வழிப்பாதை திட்டத்திற்காக உச்ச முக்கியத்துவத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன்போது கேட்டுக் கொண்டிருந்தார். 

இரு நாடுகளுமே மிக தெளிவான தமது எதிர்கால திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளனர். 

அதாவது புதிய பட்டுவழிப்பாதை திட்டத்திற்கு இலங்கை முன்பை விட வலுவாக ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை சீன ஜனாதிபதி வலியுறுத்துகையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை முக்கியமான பகுதி என்பதை அமெரிக்கா மிக அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது. 

எனவே இலங்கையுடன் நட்பை கொண்டாடும் சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடும் இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கு சவாலாகி விட கூடாது என்பதே உணர்த்தப்பட்டுள்ளது. 

தென் சீன கடலில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை மையப்படுத்தியே அமெரிக்க இந்த விடயத்தை முன்கூட்டியே இலங்கைக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment