சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்பிக்கப்பட்டவுடன் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்பிக்கப்பட்டவுடன் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தல்

(எம்.மனோசித்ரா) 

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கும் பலமான பாராளுமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். எனவே சுகாதார அமைச்சினால் நாட்டின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்பிக்கப்பட்டவுடன் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கொரோனா வைரஸ் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட முப்படையினரின் செயற்பாடுகள் புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் என்பவற்றின் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தல் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

எனினும் எதிர்க்கட்சியினரால் இது தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தல் காலம் என்பதாலேயே அரசாங்கத்திற்கு எதிராக இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணியும் இவ்வாறான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுள்ளது. வெகு விரைவில் மக்கள் விடுதலை முன்னணி மக்களாலேயே இல்லாமலாக்கப்படும். 

கடந்த நவம்பர் மாதம் 69 இலட்சம் மக்கள் வாக்குகளை வழங்கி அவர்களால் புதிய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணை நிறைவேற்றப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு தேர்தல் ஆணைக்குழு விரைவில் சிறந்தவொரு தீர்மானத்தை அறிவிக்க வேண்டும். 

கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சினால் ஆலோசனை அறிக்கை வழங்கப்பட்டவுடன் அதன் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். காரணம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் மக்களின் ஆணையை நிறைவேற்றுவதற்கும் பலமான பாராளுமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment