குழந்தைகளை தாக்கும் புதிய நோய் - அமெரிக்காவில் 3 பேர் பலி - ஐரோப்பிய நாடுகளை தாக்கும் அச்சம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

குழந்தைகளை தாக்கும் புதிய நோய் - அமெரிக்காவில் 3 பேர் பலி - ஐரோப்பிய நாடுகளை தாக்கும் அச்சம்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுடன் புதிய அழற்சிநோயும் சேர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. இதில் 3 சிறார்கள் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கே இன்னும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனாவுடன் புதிய அழற்சி நோயும் சேர்ந்து பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

நியூயோர்க் உள்ளிட்ட 17 மாகாணங்களில் இந்த தாக்குதல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் கூட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்று நோயுடன் இணைந்து அழற்சி நோயும் தாக்குவதால் அவதிப்படுவதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து நியூயோர்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூஸ் கியூமோ, நியூயார்க்கில் நேற்றுமுன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது குழந்தைகளுக்கு கொரோனாவுடன் புதிய அழற்சி நோயும் சேர்ந்து கொண்டு தாக்குகிறது. இது ஒரு அபூர்வமான அழற்சி நோய். இதனால் நிலைமை மோசமாகி வருகிறது.

இது குழந்தைகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி மரணமும் நேர்கிறது. இந்த நோய் ‘பீடியாட்ரிக் மல்டி சிஸ்டம் இன்பிளமேட்ரி சிண்ட்ரோம்’ என அழைக்கப்படுகிறது.

இது தாக்கி, இதுவரையில் 5 மற்றும் 7 வயதான 2 சிறுவர்கள், 18 வயதான பெண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி நியூயோர்க்கில் மட்டும் 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நியூயோர்க் மாகாண பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதேபோன்று மேலும் 16 மாகாணங்களில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நோய் இனி வரும் வாரங்களில் அதிகரிக்கக்கூடும். பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், சாப்பிடுவதில் பிரச்சனை ஏற்பட்டால், அடிவயிற்றில் வலி ஏற்பட்டாலோ, வயிற்றுப்போக்கு நேரிட்டாலோ, வாந்தி எடுத்தாலோ, சுவாசிப்பதில் சிக்கல் உண்டானாலோ, தோல் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடி விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி நியூயோர்க் நகர மேயர் பில் டி பிளேசியோ கூறியதாவது கொரோனா வைரஸ் தொற்றுடன் இணைந்த அரிதான இந்த அழற்சி நோய் ஏற்படுவது உண்மையிலேயே கடினமாக உள்ளது. நானும் ஒரு தந்தை என்ற நிலையில் சொல்கிறேன். இந்த நோய் புதிதாக தாக்கி வருவதை பார்க்க கஷ்டமாக உள்ளது. இதனால் பாதிக்கப்படுகிற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாங்கள் இப்போது உஷாராக இருக்கிறோம். நியூயார்க் நகரில் மட்டுமே 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 55 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படடுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடான இங்கிலாந்திலும் இந்த நோய் பரவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அழற்சி நோயால் குழந்தைகளுக்கு காய்ச்சல், அடிவயிற்றுவலி, இதயத்தில் கூட பிரச்சனைகள் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் ‘கவாசாகி’ நோயைப் போன்றது, இது இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது, பெரும்பாலும் குழந்தைகளைத்தான் பாதிக்கிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment