ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்த முடியாது - உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு! - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்த முடியாது - உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

பாராளுமன்ற கலைப்பு, தேர்தல் திகதி தொடர்பிலான வர்த்தமானிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 08 அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான பரீசீலனை இன்று (20) மூன்றாவது நாளாக இடம்பெற்றபோதே, தேர்தல்கள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள Covid-19 அச்சுறுத்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மன்றிற்கு தெரிவித்தார்.

இன்று (20) பிரதம நீதியரசர் தலைமையில் கூடிய உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவின் முன்னிலையில், ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், திட்டமிட்டபடி ஜூன் மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என மன்றிற்கு தெரிவித்தார்.

சுகாதார பிரிவினரால் தேர்தலை நடாத்த முடியும் என உத்தரவாதம் வழங்கப்பட்டதன் பின்னர், ஆணைக்குழுவிற்கு தேர்தல் முன்னாயத்தங்களை மேற்கொள்ள 9 - 11 வாரங்கள் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊரடங்கு உத்தரவு மற்றும் வீடுகளிலிருந்து வெளியே செல்வது தொடர்பான கட்டுப்பாடுகள் காணப்படுவதனால், மனிதவளம், வேலை நேரம் ஆகியன மிகவும் குறைவாகக் காணப்படுவது இதற்கு மேலும் பாதிப்பு என அவர் மன்றிற்கு விளக்கினார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (20) காலை 10.30 மணியளவில் மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பமானது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த இரண்டு நாட்களாக உயர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்டத்தரணி சரித்த குணரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் இடை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment