இராணுவ ஆட்சிக்கு மக்களை இசைவாக்கமடையச் செய்கிறது அரசு : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

இராணுவ ஆட்சிக்கு மக்களை இசைவாக்கமடையச் செய்கிறது அரசு : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

சட்டவிரோதமான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

தேர்தல் திகதி அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது.

சபாநாயகரினால் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டமுடியும்.

சட்டங்கள் மூலம் அரசாங்கம் முஸ்லிம்களை அடிமைப்படுத்துகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் ஜூன் 20ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ள போதிலும், தேர்தல் ஆணைக்குழு அரசியலமைப்பை மீறி செயற்படுகின்றது என எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தி வருகின்றார்கள்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரியவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த குற்றச்சாட்டுக்களை அரசியல் கட்சிகள் முன்வைத்திருந்ததாக அந்த கூட்டத்தில் பங்குபற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ‘தமிழன்’ இணையப் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலை நடத்தாது, ஜனாதிபதியின் ஆட்சியை மாத்திரம் கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட்டு வருகின்றது என ரவூப் ஹக்கீம் கூறுகின்றார். இராணுவ ஆட்சிக்கு மக்களை இசைவாக்கமடைய செய்யும் முயற்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கேள்வி: தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடனான சந்திப்பில் என்ன நடந்தது?

பதில்: நாங்கள் எங்களுடைய ஆட்சேபனையை பலமாக முன்வைத்தோம். நான், சுமந்திரன் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிட்டோம். தேர்தல் நடத்துவதற்காக திகதியை குறிப்பிட்டுவிட்டு, எங்களை அழைத்திருப்பதை விடவும், எங்களை அழைத்து விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர் தீர்மானமொன்றை எட்டியிருக்க முடியும் என நாம் அவருக்கு கூறினோம்.

எங்களின் கைகளை கட்டிவிட்டு, ஓடுமாறு சொல்கிறீர்கள். நாட்டு மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் என அனைத்தும் ஒரு பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ள நிலையில், ஜூன் 20ஆம் திகதிக்குள் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதியளித்துள்ளாரா என நாம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவினோம். பிரச்சினை தீர்ந்துவிடும் என நிச்சயமாக சொல்ல முடியாது என சுகாதார பணிப்பாளர் தெரிவித்ததாக அவர் கூறினார்.

ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் புதிய பாராளுமன்றம் கூடாத பட்சத்தில் அரசியல் யாப்பு குளறுபடியொன்று உருவாகும் எனவும், அதனை தீர்ப்பதற்கு உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனைகளை பெறுமாறும் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை இதற்கு முன்னர் எழுதியிருந்தீர்கள். அதனை நிராகரித்து ஜனாதிபதி உங்களுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். நீங்களே திகதியை நிர்ணயிக்க வேண்டும் என ஜனாதிபதி மறைமுகமாக உங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.

அதன்பின்னர் பிரதமர் நித்திரையிலிருந்து எழுந்தவாறு ஒரு மாதத்தின் பின்னர் திகதி குறிக்காமல் தேர்தலை பிற்போட்டமை பிழை என்ற விதத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து, கொவிட்-19 பிரச்சினை முடிவுக்கு வராத நிலைமையில் ஜூன் 20 தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்துள்ளமை பிழை என நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த விடயங்களை செவிமடுத்த அவர், மே 4ஆம் திகதியளவில் மீண்டுமொரு முறைகூடி விடயங்களை ஆராய்வோம் என குறிப்பிட்டார்.

கேள்வி: புதிய தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணான விடயமா?

பதில்: நிச்சயமாக, இந்த செயற்பாடு அரசியலமைப்பை மீறி முன்னெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடாகும். அரசியலமைப்புக்கு விரோதமான விடயமொன்றை செய்துள்ளார்கள். ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் புதிய பாராளுமன்றம் கூடவில்லையென்றால், அது அரசியலமைப்பை மீறும் விடயமாகும். தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருமேயானால், அதனை காரணம் காட்டி ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டாது, தொடர்ச்சியாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வார்.

கொவிட்-19 பிரச்சினை தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டாது செயற்படுவார். அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்குகின்றது. ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி செயற்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவும் பக்கபலமாகவுள்ளது. நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பதில் சொல்லிக்கொள்ள முடியவில்லை. இது அப்பட்டமான அரசியலமைப்பு மீறலாகும்.

கேள்வி: தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிவிப்பை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: அரசாங்கத் தரப்புக்கு தேர்தல் பிரசாரத்தை இலகுவாக செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு பாகுபாடு காட்டப்படுகின்றது. எங்களுக்கு சுதந்திரமாக தேர்தல் பிரசாரங்களை செய்யக்கூடிய ஒரு சூழ்நிலை தற்போது இல்லை. ஆனால் அரசாங்கம் என்ன செய்கிறது? ஊரடங்கு அனுமதி பத்திரத்தை அரசாங்க தரப்பை அங்கம் வகிப்போர் எடுத்துக்கொண்டு, மக்களுக்கு பொருட்களை பகிர்ந்தளிக்கின்றார்கள். அரசாங்க உதவி தொகைகளுக்கும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோரை தலையீடு செய்து பகிர்கின்றனர். தேர்தல் சட்டத்தை மீறி செயற்படுவதற்கான வாய்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தாமல் இருக்கிறது. பஷில் ராஜபக்ஷ அந்த கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவிவகிக்கும் அதேவேளை, அரச செயலணியொன்றின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வித கேள்வியும் கேட்காதுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு இயங்க முடியாத சூழலில் அவர்கள் இயங்கி வருகின்றார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இது தவறான விடயம் என்பதை நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்பதற்காகவே சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அனைத்து தரப்புக்கும் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், அரசாங்கத்தின் எடுபிடிகளாகவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகின்றது. இந்த விடயங்களையும் நாங்கள் அவர்களிடமே கூறியிருந்தோம்.

கேள்வி: 1981ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம், நாடு இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத நிலைமையொன்றை எதிர்கொள்ளும்போது, தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது என ஆணைக்குழு உறுப்பினரான இரத்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: நாட்டில் எது உச்ச சட்டம்? அரசியலமைப்பே நாடொன்றின் உச்ச சட்டமாகும். அரசியலமைப்பை மீறினால், எந்த சட்டத்தை பின்பற்றுவது? தேர்தல் ஆணைக்குழு பிழைகளுக்கு எதிராக கேள்வி எழுப்பிய ஒருவரே அவர். தற்போது அவரையும் இவர்கள் விலைக்கு வாங்கியதுபோல்தான் விளங்குகின்றது.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தை மாத்திரமே நாங்கள் கவனத்திற் கொள்ளலாம். அரசியலமைப்பை கவனத்தில் கொள்ள தேவையில்லை என யாராலும் கூறமுடியுமா? அரசியலமைப்பினாலேயே உருவாக்கப்பட்ட இந்த ஆணைக்குழு தற்போது தெரிவிக்கின்றது, சாதாரண சட்டத்தின் பிரகாரம் நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என கூறுகின்றது. அது அரசியலமைப்பை மீறிய விடயம் என்றாலும் நாங்கள் அதனை செய்வோம் என கூற முடியுமா? தப்பித்துக்கொள்வதற்கான கருத்தாகவே நாம் இதனை அவதானிக்கின்றோம்.

கேள்வி: நீதிமன்றத்தை நாட முடியும் அல்லவா?

பதில்: நீதிமன்றத்துக்கு செல்லுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகின்றது. ஆனால், புதுக்கடை நீதிமன்ற வளாகம் முழுவதையும் அரசாங்கம் தற்போது முழுமையாக முடக்கியுள்ளது. நீதிமன்றத்துக்கே செல்லமுடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர். உயர் நீதிமன்றம் இருக்கின்ற வளாகம் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்வதற்கேனும் நீதிமன்ற வளாகத்தை நாடமுடியாது.

சட்டமா அதிபர் திணைக்கள காவலாளிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமையினால், சட்டமா அதிபர் திணைக்களத்தையும் அரசாங்கம் மூடியுள்ளது. இது அரசாங்கத்தினால் வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் ஒரு செயற்பாடு. தேவையான அனைத்து இடங்களையும் அரசாங்கம் முடக்குகின்றது. பண்டாரநாயக்க மாவத்தையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதே நாளிலேயே தேர்தல் திகதியும் அறிவிக்கப்படுகின்றது. இது எவ்வளவு மோசமான விடயம். முழு நாட்டையும் பேராபத்தில் சிக்கவைக்க முயற்சிகளை அல்லவா அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

கேள்வி: தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுகின்றது என நினைக்கின்றீர்களா?

பதில்: அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு இசைவாக்கமடையும் நிலைமையொன்றே உருவாகியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. அதனை நாங்கள் சவாலுக்குட்படுத்தியே ஆகவேண்டும். ஏனென்றால், அரசாங்கத்துக்கு தேவையான விடயங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அரசாங்கம் அரசியலமைப்பை மீறி செயற்படுகின்றது. பாராளுமன்றம் இல்லாமல், ஜனாதிபதி நாட்டை ஆட்சிசெய்யும் வகையிலான ஒரு நடைமுறையை அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தையே தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது செய்துவருகின்றது. இதுவே எமது நிலைப்பாடு.

கேள்வி: நாட்டில் ஜனநாயகம் வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அதேநேரம் பாராளுமன்றத்தை கூட்டக்கூடிய சந்தர்ப்பமும் தற்போது நாட்டில் கிடையாது. இவ்வாறான நிலையில் தற்போது நாட்டில் இராணுவம் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமை தொடருமானால், நாடு இராணுவ ஆட்சியை நோக்கி செல்லக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். பாராளுமன்ற தேர்தல் நடைபெறாத பட்சத்திலேயே இந்த ஆபத்து ஏற்படும் அல்லவா?

பதில்: ஆம். அந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதிகார முறையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வழியமைத்து கொடுக்கும் வேலைக்கு உடந்தையாகவே தேர்தல்கள் ஆணைக்குழு இருக்கின்றது. இதுவே எங்களின் நிலைப்பாடு.

கொவிட்-19 கட்டுப்பாடு என்ற போர்வையில் இராணுவ ஆட்சியொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. அதற்கு மக்களை இசைவாக்கமடையச் செய்யும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களை இசைவாக்கமடையச் செய்து, நாட்டில் இந்த நிலைமை தொடர்ந்தால் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கான ஒத்துழைப்புக்களையே தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கி வருகின்றது. இதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்.

கேள்வி: ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் புதிய பாராளுமன்றம் கூடாத பட்சத்தில், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி செயலிழக்கும் என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?

பதில்: பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் வலிதாகிவிட்டது. இதுவே சரியான வசனம். பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமானியே வலிதாகின்றது. பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி வலிதாகினால், இருந்த பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். எனவே, அந்த பாராளுமன்றம் திரும்பவும் உயிர்பெற்று விட்டது என்பதே அர்த்தமாகும்.

கேள்வி: அப்படியென்றால், சபாநாயகரினால் பாராளுமன்றத்தை தன்னிச்சையாக கூட்ட முடியுமா?

பதில்: நிச்சயமாக. சபாநாயகரினால் பாராளுமன்றத்தை கூட்டமுடியும் என்பதே எமது நிலைப்பாடு. யாரிடமும் கேட்கவேண்டிய அவசியம் கிடையாது. சபாநாயகரிடம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட வேண்டும். எல்லாரும் அச்சப்பட்டு கொண்டிருக்க முடியாது. சபாநாயகருக்கு புதிய பாராளுமன்றம் கூடும்வரை அவருக்கு அதிகாரம் இருக்கின்றது என நாங்கள் கூறினோம். ஆனால், அவர் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து பயம் காரணமாக வெளியேறிவிட்டார். சட்ட மாஅதிபர் இருக்க முடியாது என கூறியதால் சென்று விட்டேன் என சபாநாயகர் கூறுகின்றார்.

சட்ட மா அதிபரே பிழையாக வியாக்கியானம் கொடுக்கின்றார். அரசியலமைப்பின்படி, சபாநாயகர் அடுத்த பாராளுமன்றம் கூடும்வரை இருப்பார். சபாநாயகரும் இந்த நடைமுறைக்கு இசைவாக்கம் அடைவதுபோலத்தான் தோன்றுகின்றது. அரசியலமைப்பை மீறிய செயற்பாட்டின்போது கடுமையாக இருந்ததை போல சபாநாயகர் மீண்டும் கடுமையாக இருக்கவேண்டிய தருணம் உருவாகியுள்ளது.

கேள்வி: உங்களின் கருத்தின் பிரகாரம், அரசாங்கம் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது என்றா கூறுகின்றீர்கள்?

பதில்: அரசாங்கம் சட்டவிரோத செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது. ஊரடங்கு சட்டமே சட்டவிரோதமானது. ஊரடங்கு சட்டம் என்ற ஒன்றே கிடையாது. ஊரடங்கு சட்டம் என்று சொலகிறார்கள். ஆனால், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழேயே ஊரடங்கு சட்டம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவே பிரகடனம் செய்யவேண்டும். அதை அரசாங்கம் செய்யவில்லை. இதற்கு வர்த்தமானியொன்று கிடையாது.

ஊரடங்கு சட்டம் தொடர்பிலான வர்த்தமானியொன்று இல்லாததன் காரணமாகவே கைதுசெய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை இலகுவாக சுமந்திரன் வெளியில் கொண்டுவந்தார். ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தலை நீதிமன்றத்தில் பொலிஸாரிடம் சுமந்திரன் கோரியிருந்தார்.
ஊரடங்கு சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தியுள்ளீர்கள். எங்கே ஊரடங்கு சட்டம் என சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பொலிஸாரிடம் கோரியுள்ளார். அது இல்லையென்பதை அடுத்தே ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டார்.

ஊரடங்கு சட்டமே சட்டவிரோதம். அரசாங்கத்தின் மீதான அச்சம் காரணமாக மக்களே இசைவாக்கமடைந்து கொண்டு செல்கின்றார்கள். மக்களை பீதியில் வைத்துக்கொண்டு, சட்டபூர்வமில்லாத எல்லாவற்றுக்கும் மக்களை இசைவாக்கமடையச் செய்கின்றார்கள்.

கேள்வி: கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பில் நீங்கள் அரசாங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடாத்தினீர்களா?

பதில்: இந்த விடயம் தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மருத்துவ துறையிலுள்ள சிரேஷ்ட பேராசிரியர்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்கள். உலக சுகாதார ஸ்தாபனம் என்ன கூறினாலும், நாங்கள் எங்கள் தீர்மானத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.

வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலிலிருந்து வேறொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனம் முதல் அனைத்து தரப்பினரும் வைரஸ் ஒன்றுக்கு உயிரிழந்த சடலத்தில் வாழமுடியாது என கூறுகின்றன. உயிர் வாழ்கின்ற உடலிலேயே வைரஸ் உயிர்வாழும். பக்றீரியாக்களுக்கு மாத்திரமே சடலத்தில் வாழமுடியும். இதனை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

உலக சுகாதார ஸ்தானம் சடலத்தை புதைப்பதற்கு சில கட்டுப்பாடுகளை மாத்திரமே விதித்துள்ளது. உலகிலுள்ள நூற்றுக்கணக்காக நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை ஏற்று செயற்படுகின்றன. ஆனால், இலங்கை மாத்திரமே சடலத்தை எரிக்கின்றது. இது தங்களுக்கு என்ற ஒரு சட்டத்தை பின்பற்றுகின்றார்கள்.

முஸ்லிம்களை புண்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை அரசாங்கம் செய்கின்றது. இதில் கட்டாயம் உள்நோக்கம் இருக்கின்றது. நாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. முஸ்லிம்களை தண்டிக்கும் ஒரு செயற்பாடு. சர்வாதிகார முறையில் இந்த விடயத்தை அரசாங்கம் செய்து வருகின்றது.

கேள்வி: நீங்கள் ஏன் இந்த விடயம் தொடர்பில் சட்டத்துறையை நாடவில்லை?

பதில்: சட்டத்துறையை நாடமுடியும். பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தை நாடமுடியும். நீதிமன்றத்தை நாடினாலும், பல மாதங்கள் இந்த வழக்கு தொடரும். இவர்களை பேச்சுவார்த்தையில் மாற்றலாம் என்ற எண்ணத்திலேயே நாங்கள் முயற்சித்தோம். அவசரமாக தலையீடு செய்யவேண்டும் என நீதிமன்றத்திடம் கேட்கலாம். இதுவரை நாங்கள் நீதிமன்றத்தை நாடவில்லை. ஆனால், இறந்த 7 பேரில் 3 பேர் முஸ்லிம்கள். 3 பேரையும் எரித்துவிட்டார்கள். இந்த விடயம் மிக மோசமாக முஸ்லிம் மக்கள் மனங்களை பாதித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நீதித்துறையை நாடுவதற்கான எண்ணங்களும் உள்ளன. அரசாங்கத்தை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வரலாம் என்ற முயற்சிதான் நடந்து கொண்டிருக்கின்றது. புதைக்கலாம் என அரசாங்கம் கூறினால், நாட்டிலுள்ள 20 மில்லியன் பௌத்த மக்களும் வீதிக்கு இறங்கி போராடுவார்கள் என்ற கதையை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் நினைப்பது தானே சட்டம். முல்லைத்தீவில் ஒருவரை மயானத்தில் புதைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், பௌத்த பிக்குகள் சிலர் அங்கு சென்று நீதிமன்ற சட்டத்தை மீறி பலவந்தமாக அதை செய்தார்கள். தமக்கு தேவையான விதத்தில் மக்களை தூண்டிவிட்டு, குளிர்காயும் அரசாங்கம் ஒன்றே தற்போது நாட்டில் உள்ளது. அச்சுறுத்தல் பாணியிலேயே அனைத்து விடயங்களும் நடக்கின்றன.

நேர்காணல் : ஹரினி செல்வராஜ்
(நன்றி: தமிழன் 22.04.2020)

No comments:

Post a Comment