கொவிட்-19 விழிப்புணர்வு தொடர்பாக சச்சின், தோனி, கோலி, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.
கொவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14 ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.
கொவிட்-19 நோய்த் தொற்று சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2 ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட இந்திய பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி, கங்குலி, சேவாக் உள்ளிட்ட 49 விளையாட்டுப் பிரபலங்களுடன் காணொலி காட்சி முறையில் ஒரு மணி நேரம் இந்திய பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் விஸ்வநாதன் ஆனந்த், பி.வி. சிந்து, அபிஷேக் வர்மா, அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட இதர விளையாட்டுப் பிரபலங்களுடனும் உரையாடிய மோடி, கொவிட்-19 பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு பிரபலங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
குறைந்த நேரமே இருந்ததால் மோடியுடன் 9 வீரர்கள் மட்டுமே உரையாட முடிந்தது. விளையாட்டு வீரர்களும் அரசின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment