(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் ஊழியர்களை பாதுகாத்து செயற்படுவது தொடர்பில் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று திறன்கள் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இடம்பெற்ற முத்தரப்பு பணி செயலக கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தக் கூட்டத்தில் உற்பத்தித்துறை வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தல் அவற்றை தொடர்ந்தும் முன்னெடுத்தல், ஊழியர்களின் தொழில் வாய்ப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுத்தல் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துதல் தொடர்பான முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது.
தொழிற்சாலை மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் வர்த்தக சபை அங்கத்தவர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பரிந்துரையொன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் இணக்கம் தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மாகாண நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட மட்டத்தில் தொழில் அதிகாரிகளை பயன்படுத்தி கருத்தாய்வுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரினால் தொழில் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக தொழிற்சாலை மற்றும் ஊழியர்களின் தொடர்ச்சியான நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து துறைகள் தொடர்பான விடயங்களை கண்டறிந்து திட்டமொன்றை வகுப்பதற்கு அமைச்சர் மட்டத்திலான முத்தரப்பு செயலணி குழுவொன்றுடன் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்தது.
இந்த பேச்சுவார்த்தையில் திறன்கள் அபிவிருத்தி தொழில் பாதுகாப்பு மற்றும் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.அபேகுணவர்தன, தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலசிறி, இலங்கை முதலீட்டு சபையின் அதிகாரிகள், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment