(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவலானது தேசிய பிரச்சினையாகும். எனவே இதனை அரசியல் நோக்கமாகக் கொண்டு பயன்படுத்திக் கொள்வது அரசாங்கத்தின் ஒழுக்க விதிமுறைகளுக்கு இழுக்காகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் மரண சடங்குகளில் மத கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதை விட மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்பதே தற்போது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.
ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளது. இதனை முற்றாக அழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
தற்போதுள்ள நிலைவரத்தின் படி ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவே எண்ணுகின்றோம். இதுவரையில் இலங்கையில் செவ்வாய்க்கிழமை மாத்திரமே ஒரே தினத்தில் அதிகளவான நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். எனினும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைந்தவொரு எண்ணிக்கையாகும்.
எனவே வைரஸானது முழு நாட்டிலும் தீவிரமாக பரவுமளவுக்கு பாரதூரத் தன்மையை அடையவில்லை. ஒரு பிரதேசங்களிலில் மாத்திரமே தொற்றுக்குள்ளானோர் இணங்காணப்பட்டுள்ளனர். எனவே இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் இதனை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புகின்றோம்.
சுகாதாரத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையினருடன் பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே அரசாங்கத்தின் சில குறைபாடுகள் தீர்க்கப்பட்டிருந்தால் தற்போதைய நிலைமையைக் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியும்.
உதாரணமாக இலங்கையில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பனவே வைரஸ் தொற்று பரவுவதற்கான பிரதான காரணிகளாகக் காணப்பட்டன. எனினும் ஆரம்பத்தில் விமான நிலையத்தை மூடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. பின்னர் சுகாதாரத் துறையினரின் அழுத்தங்களுக்கமையவே விமான நிலையங்கள் மூடப்பட்டன.
விமான நிலையங்கள் மூடப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டுக்கு திரும்புபவர்கள் அனைவரும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்ட போதிலும் பெரும்பாலானவர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
எனவேதான் தற்போது பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது. இதனை ஆரம்ப கட்டத்திலேயே அரசாங்கம் செயற்படுத்தியிருக்கலாம். இவ்வாறான சில பொறுப்பற்ற செயற்பாடுகளாலேயே தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை பிரதானமாகக் காணப்படுவதோடு சமூக இடைவெளியைப் பேணுவதும் அத்தியாவசியமாகிறது. இதற்கு ஊரடங்கு சட்டம் மிக அத்தியாவசியமானதாகக் காணப்படுகிறது. எனவே அதனைத் தொடர வேண்டியுள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வீட்டுக்குள்ளேயே இருப்பதாலும் பலர் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுத்துள்ள ஒரு செயற்திட்டத்தால் பிரிதொரு விடயம் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
அதாவது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும் அதேவேலை நீண்டகால மருந்துகள் எடுக்கும் நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களால் பாதிக்கப்படும் ஏனைய விடயங்களுக்கான தீர்வு துரிதமாக முன்வைக்கப்பட வேண்டும்.
இதனை வெறும் சுற்று நிரூபத்திற்குள் மாத்திரம் உள்ளடக்கிவிடாது கீழ் மட்டத்திலிருந்து நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அனைவருக்கும் அவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் திறனற்றவை என்றே கூற வேண்டும்.
ஊரடங்கு சட்டம் பல நாட்கள் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும் அது தற்காலிகமாக நீக்கப்படும் போது மக்கள் ஒன்று கூடுகின்றனர். இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் பயன் அற்றுப் போகின்றது. இதற்கான ஸ்திரமான தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்.
மரண சடங்குகள்
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரரிழப்பவர்களின் மரண சடங்குகள் தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முழு உலகமும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மத கோட்பாடுகளின் படி செயற்பட வேண்டும் என்பதை விட மருத்துவ ஆலோசனைகளின் படி செயற்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகும்.
அரசியலாக்க வேண்டாம்
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தேசிய பிரச்சினையாகும். எனவே இது எவ்வித பேதமும் இன்றி அனைவரும் பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட வேண்டிய தருணமாகும். இந்த சந்தர்ப்பத்தில் இதனை ஒரு அரசியல் குழு மாத்திரம் கையிலெடுத்துக் கொண்டு செயற்படுவது அரசாங்கத்தின் ஒழுக்க நெறிகளுக்கு இழுக்காகும்.
பசில் ராஜபக்ச என்பவர் அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது ஒரு அரச அதிகாரியோ அல்ல. ஒரு அரசியல் கட்சியின் ஸ்தாபகராவார். அதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவின் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டுள்ளார். எனவே அவர் தலைமையில் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை எந்த அடிப்படையில் என்று எமக்கு விளங்கவில்லை. இவ்வாறானதொரு நெருக்கடியாக சூழலை தேர்தலை நோக்காகக் கொண்டு பயன்படுத்திக் கொள்வது பெரும் தவறாகும்.
பாராளுமன்றத்தைக் கலைத்தல்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் நோக்கம் பாராளுமன்றத்தை முடக்கி அனைத்து நடவடிக்கைகளையும் தானே முன்னெடுக்க வேண்டும் என்பதாகும். அவ்வாறில்லை என்றால் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம். பாராளுமன்றத்தைக் கலைக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் சென்றிருக்கலாம். எவ்வாறிருப்பினும் இது ஒரு தேசிய பிரச்சினை என்பதால் தேசிய தீர்வு அவசியமாகும் என்றார்.
No comments:
Post a Comment