(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ஜேர்மன் மற்றும் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி அந்நாட்டுத் தலைவர்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்க தனித்தனியாக கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகள் பலவற்றுக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நிலையில், செயற்திறன் மிக்க நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கும் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் மற்றும் நோர்வே பிரதமர் ஏர்னா சுர்பேர்க் ஆகியோரைப் பாராட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குத் தனித்தனியாகக் கடிதங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
அந்த வகையில் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கலுக்கு அனுப்பி வைத்திருக்கும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவலானது மக்களின் அன்றாட வாழ்க்கை முறைக்குப் பாரிய அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் தோற்றுவித்திருப்பதுடன், எதிர்காலம் தொடர்பான அவதான நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எனினும் உங்களது தலைமைத்துவத்தின் கீழ் கொரோனா வைரஸ் பரவலால் ஜேர்மனிய மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து விரைவாக மீள முடியும் என்று நம்புகின்றேன்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், மீண்டும் பழைய நிலையை ஏற்படுத்துவதற்கும் உங்களது அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் எனைய நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று நோர்வே பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, தற்போது நோர்வே தொற்று நோய் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறது என்றும் சுட்டக்காட்டியிருக்கிறார்.
No comments:
Post a Comment