அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்திட்டங்கள் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று (01.04.2020) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்தாவது, "கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்களுக்காக பல நிவாரணத்திட்டங்களை அரசாங்கம் அறிவித்தது.
வீடுதேடிவந்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்பது உட்பட பல விடயங்கள் அதில் உள்ளன. இருந்தும் செயற்படுத்தப்படவில்லை.கண்டி மாவட்டம் மட்டுமல்ல நாட்டில் பல இடங்களிலும் இதே நிலைமையே காணப்படுகின்றது.
'கொரோனா' வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பொறுப்புடன் செயற்படும் அதேவேளை, மக்களுக்கு தேவையான அத்தியாவசியை சேவைகளை தங்குதடையின்றி அரசாங்கம் வழங்கவேண்டும். வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதுபோல், பட்டினி சாவில் இருந்தும் அவர்களை மீட்டெடுக்க வேண்டும்.
நாமும் களத்தில் இருந்து சேவைகளை வழங்கிவருகின்றோம். மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை ஜனாதிபதி செயலணியின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளோம். எனவே, ஒரு சில பகுதிகளில் மட்டுமல்லாது பட்தொட்டியெங்கும் அரச சேவை விஸ்தரிக்கப்படவேண்டும்." என்றுள்ளது.
No comments:
Post a Comment