“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இஸ்லாமிய சகோதரரின் உடலை தகனம் செய்தமை இஸ்லாத்தை இழிவுபடுத்தும் செயல்” - வி.ஜனகன் கண்டனம்...! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இஸ்லாமிய சகோதரரின் உடலை தகனம் செய்தமை இஸ்லாத்தை இழிவுபடுத்தும் செயல்” - வி.ஜனகன் கண்டனம்...!

(றிஸ்கான் முகம்மட்)

இலங்கையில் கொரோனா (COVID-19) வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் ஜனாஸா, இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் தகனம் செய்யப்பட்டமை குறித்து, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான வி.ஜனகன் தனது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறியதாவது நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால், COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை, இந்த நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது.இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

தொற்று நோய்க்கு இனம், மதம், பேதம் தெரியாது. இதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். 

பாரியளவில் வியாபித்து பரவிவரும் தொற்றுநோய் என்றாலும், சமய உணர்வுகளுக்கு இந்த அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். WHO இன் அறிக்கைப்படி எட்டு அடி ஆழத்தில் உடலத்தை முறைப்படி புதைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குடும்பத்தவர்களின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் கருத்திற்கொள்ளாது ஜனாஸாவை எரிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த நிலைப்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கும், சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் இது சம்பந்தமான கூட்டத்தில் உரிய சுற்றறிக்கையை மீளாய்வு செய்வதுபற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிகின்றது.

அதனால் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்யும் முறை தொடர்பாக சற்று சிந்தித்து இந்த அரசாங்கம் உடன் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.

அதேவேளை அனைத்து மக்களும் அவர்களின் சமயரீதியான உரிமையை அவர்கள் வலியுறுத்தும் அதேவேளையில், தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதுபோன்ற மரணங்கள் எமது நாட்டில் இடம்பெற கூடாது என்று எல்லோரும் பொதுவான இறைவனை வேண்டிக் கொள்ளவதுடன், இவ்வாறான செயல் இந்த நேரத்தில்  இஸ்லாமிய உறவுகளின் உள்ளத்தை  புண்படுத்தி இருக்கலாம்.

ஆகவே, இவ்வாறான மரணங்கள் இனிமேல் இடம்பெற்றால் அவர் அவர் மத ரீதியாக நல்லடக்கம் செய்ய இந்த அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டி கொள்வதுடன், நாளை இடம்பெற உள்ள கொரோனா விடயம் தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடையம் தொடர்பில் அழுத்தமாக பேசும்படி எனது கட்சி தலைவர்,முன்னால் அமைச்சர் மனோ கணேசன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன். எனது கட்சி தலைவர் இந்த விடையம் தொடர்பில் தெளிவாக பேசுவதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment